அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) துணைப் பொதுச்செயலாளராக இருந்த மாணிக்கராஜா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார். அமமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தினகரனுக்கு மிக நெருக்கமானவராகவும், அவரது ‘வலது கரம்’ போன்றும் செயல்பட்டு வந்த மாணிக்கராஜா மீது எடுக்கப்பட்டுள்ள இந்த ஒழுங்கு நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணிக்கராஜா இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அவர் கட்சி மாறப்போகிறார் என்ற செய்தி பரவிய சில நிமிடங்களிலேயே, கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி அவரை நீக்கி தினகரன் உத்தரவிட்டுள்ளார். தென் மாவட்டங்களில் அமமுகவின் முக்கிய முகமாக விளங்கிய மாணிக்கராஜாவின் விலகல் அக்கட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
