தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தமிழகம் வந்திருந்தார். இந்தச் சூழலில், பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக தலைமை அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தலில் பலமான கூட்டணியை அமைக்க வேண்டுமானால், ஜனவரி இறுதிக்குள் இவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து, அவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. அமித் ஷாவின் இந்தப் பயணத்தின்போது எடப்பாடி பழனிசாமி அவரை நேரில் சந்திக்கவில்லை என்பதும், அதற்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அமித் ஷாவைச் சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஜனவரி கெடுவுக்குள் சமரசம் ஏற்படவில்லை எனில், கூட்டணி பேச்சுவார்த்தைகளில் சிக்கல் நீடிக்கும் என்பதால் அதிமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
