உலக நாடுகளுக்கெல்லாம் ஆயுதங்களை சப்ளை செய்யும் ‘பெரியண்ணன்’ அமெரிக்கா, தற்போது தானே ஆயுதத் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் உலக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. உக்ரைன் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு வாரி வழங்கியதில், அமெரிக்காவின் ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்து இருப்பு அபாயகரமான அளவிற்குக் குறைந்துவிட்டதாகத் தரவுகள் கூறுகின்றன. ஒருவேளை இப்போது சீனா போன்ற ஒரு பெரிய நாட்டுடன் போர் மூண்டால், அதை எதிர்கொள்ளத் தேவையான அடிப்படைத் தளவாடங்கள் கூட அமெரிக்காவிடம் போதிய அளவில் இல்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஆயுதங்களைச் செலவழிக்கும் வேகம் அதிகமாகவும், அவற்றைத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் வேகம் மிக மெதுவாகவும் இருப்பதே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணம். இழந்த ஆயுத இருப்பை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் மோதல்களில் தலையிட்டு ‘பாதுகாவலன்’ வேடம் போடும் அமெரிக்கா, தனது சொந்தப் பாதுகாப்பையே கோட்டை விட்டு நிற்கிறதா என்ற கேள்வியும், இது மற்ற நாடுகளுக்கு (குறிப்பாக சீனாவுக்கு) ஒரு சாதகமான வாய்ப்பாக அமையுமா என்ற அச்சமும் சர்வதேச அரங்கில் மேலோங்கியுள்ளது.
