HEALTH
இந்தியாவை நெருங்கிய குரங்கு அம்மை நோய்… உங்களை தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் இதோ…
உலகின் பல நாடுகளில் குரங்கம்மை வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. WHO இதை ஒரு பொது சுகாதார அவசர நிலையாகவும் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் இருந்து ஆரம்பித்த இந்த குரங்கு அம்மை நோய் தற்போது பாகிஸ்தானில் பரவி தற்போது இந்தியாவையும் நெருங்கி வருகிறது. இந்த குரங்கு அம்மை வைரஸ் நோயின் அறிகுறிகள் என்ன இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை இனி காண்போம்.
சின்னம்மை தட்டம்மை போன்ற நோய்களால் ஏற்படும் வைரஸ்கள் போன்று தான் குரங்கமை வைரஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சின்னமை தட்டமைக்கு தடுப்பூசி போட்டவர்களுக்கு இந்த நோய் பெறுவதற்கான அபாயம் குறைவு என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த குரங்கு அம்மை நோய் தீவிரமான வைரஸ் பாதிப்பு ஆகும். இது ஏற்பட்டால் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் காலவரம்புக்கு உட்பட்ட நோயாகும்.
குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டால் ஏற்படும் அறிகுறிகள் என்னவென்றால் காய்ச்சல், தோளில் சிறு கொப்புளங்கள், முகத்தில் தொடங்கி கை கால் உள்ளங்கை உள்ளங்கால் வரை கொப்பளங்கள் பரவுதல், கணுக்கால் வீக்கம், தலைவலி, தசை பிடிப்பு, உடல் சோர்வு, தொண்டைப்புண் மற்றும் இருமல் ஆகியவை ஆகும். இதனால் ஏற்படும் பாதிப்புகள் ஆனது கண் வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சு திணறல், நெஞ்சு வலி, மூச்சு விடுவதில் சிரமம், வலிப்பு, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்றவை ஆகும்.
குரங்கு அம்மை நோய் பரவுவது எப்படி என்றால் நோய் உள்ளவர்களின் சுவாசத் துளிகள் வாயிலாகவும் பரவலாம். நோய் உள்ளவருடன் பாலியல் தொடர்பு அவர்கள் உடுத்திய துணியை பயன்படுத்துதல் மூலமாகவும் பரவக்கூடும். இந்த குரங்கு அம்மை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன தெரியுமா?
நீங்களோ உங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ குரங்கு அம்மை நோய் அறிகுறி தென்பட்டால் அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு உடனே செல்ல வேண்டும். நோய்வாய் பட்டவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும். நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை மற்றவர்களிடம் இருந்து தனிமை படுத்த வேண்டும். அருகில் உள்ளவர்களுக்கு நோய் பரவுவதை குறைப்பதற்கு முக கவசத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் நோய் வராமல் தடுப்பதற்கு அம்மை நோய் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம்.