நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகங்கள், நச்சுக் கழிவுகளை வடிகட்டுதல் மற்றும் திரவங்களைச் சமநிலைப்படுத்துதல் போன்ற முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றன. சிறுநீரகங்களின் செயல்பாடு குறையும்போது, உடல் சில ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளைக் காட்டத் தொடங்கும். குறிப்பாக, இந்த அசௌகரியம் எப்போதும் நேரடியாகச் சிறுநீரகப் பகுதியில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை; மாறாக, கீழ் முதுகு, வயிறு, இடுப்பு, கால்கள் அல்லது மார்பு போன்ற எதிர்பாராத பகுதிகளிலும் வலி வெளிப்படலாம் என்று தேசிய மருத்துவ நிறுவனம் எச்சரித்துள்ளது.
சிறுநீரகக் கற்கள், சிறுநீர்ப் பாதை நோய்த்தொற்றுகள் அல்லது நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) போன்ற பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறியாக கீழ் முதுகு, விலா எலும்புக் கீழுள்ள பக்கவாட்டுப் பகுதி, அடிவயிற்றுப் பகுதி, இடுப்பு மற்றும் தொடைகளில் கடுமையான வலி அல்லது தசைப்பிடிப்பு, கணுக்கால் மற்றும் பாதங்களில் வீக்கம் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். இதுபோன்ற நுட்பமான அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய மருத்துவ ஆலோசனையைப் பெறுவது, சிறுநீரக நோய் தீவிரமடைவதைத் தவிர்க்க பெரிதும் உதவும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
