நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக நேற்று விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. ஏகப்பட்ட கட்டவுட்டுகள் வைக்கப்பட்டு பட்டாசுகள் வெடித்து ரசிகர்கள் பண்டிகையாக விடாமுயற்சி திரைப்படத்தை கொண்டாடினர். அஜர்பைஜானில் தனது காதல் மனைவியை கடத்திய கும்பலிடம் இருந்து அவரை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்ற கதைக்களத்தை கொண்ட விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
இருந்தாலும் ஹாலிவுட் தரத்தில் படத்தின் மேக்கிங் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அஜித்தின் மற்ற படங்களைப் போல விடாமுயற்சி படத்துக்கும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இருந்தாலும் அவருடைய முந்தைய படமான துணிவு படத்தின் முதல் நாள் வசூலை முந்தவில்லை என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் வெளியாகி உள்ளது. அதன்படி விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 22 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் 21.5 கோடி வசூல் செய்துள்ளது.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் முதல் நாளில் 23 கோடி வசூல் செய்திருந்தது. அந்த வசூலை விட விடாமுயற்சி வசூல் சற்று குறைவு தான். உலக அளவில் விடாமுயற்சி திரைப்படம் முதல் நாளில் 35 கோடி வரை வசூல் செய்துள்ளதாக என கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டுமே 30 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தமிழகத்தில் 22 கோடி வசூல் செய்துள்ளது அஜித் ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.