நேருக்கு நேர் படத்தில் அஜித் இருக்கக் கூடாது என உறுதியாக சொன்ன மணிரத்னம்- சூர்யா வந்த பின்னணி!

By vinoth

Published on:

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்கள் விஜய்யும், அஜித்தும். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் ஒரே காலகட்டத்தில்தான் அறிமுகமானார்கள். இவர்களின் வளர்ச்சியும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில்தான் தொடங்கியது.

இருவரும் இணைந்து ராஜாவின் பார்வையிலேயே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்க அஜித் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருப்பார். இளையராஜா இசையமைத்த இந்த படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அஜித் விஜய் இணைந்து நடித்த ஒரே படம் என்ற பெருமையை மட்டும் இன்றுவரை பெற்றுள்ளது.

   

அடுத்து இருவரும் இணைந்து இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நேருக்கு நேர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்கள். அந்த படத்தை இயக்குனர் மணிரத்னத்தின் ஆலயம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. படத்தின் ஷூட்டிங் தொடங்கி அஜித் 10 நாட்கள் வரை இந்த படத்தில் நடித்தும் இருந்தார்.

ஆனால் அப்போது கார் ரேஸ் மற்றும் நடிகை ஹீராவுடனான காதல் ஆகியவற்றின் காரணமாக அஜித் சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனால் கடுப்பான தயாரிப்பாளர் மணிரத்னம் இயக்குனர் வசந்திடம் இந்த படத்தில் அஜித் இருக்கக் கூடாது என உறுதியாக சொல்லிவிட்டாராம்.

அதன் பிறகு அந்த படத்தில் இருந்து அஜித் நீக்கப்பட்டு அவருக்கு பதில் அறிமுக நடிகரான சூர்யா அழைத்து வரப்பட்டுள்ளார். நடிப்பில் ஆர்வமின்றி இருந்த சூர்யாவுக்கு பயிற்சியளித்து அந்த படத்தில் நடிக்க  வைத்துள்ளனர். ஆனால் அந்த படத்தில் காதல் காட்சிகள் மற்றும் நடனக் காட்சிகளில் ரொம்பவே தடுமாறியிருப்பார் சூர்யா.

ஆனாலும் மிக விரைவிலேயே அனைத்தையும் கற்றுக் கொண்டு இன்று தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் இருந்து அஜித் விலகியதால் தமிழ் சினிமாவுக்கு சூர்யா என்ற மற்றொரு அற்புதமான நடிகர் கிடைத்தார். இன்று மூவருமே மிக முக்கியமான நடிகர்களாக வலம் வருகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.