தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அவருக்கென வெறித்தனமான லட்சக் கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் படம் ரிலீஸ் ஆகும் நாட்களில் தியேட்டர்கள் திருவிழா கோலம் கொள்கின்றன.
இப்படி வெறித்தனமான ரசிகர்கள் இருந்தும் அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பாக தன்னுடைய ஆயிரக் கணக்கான ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். இதற்கு அவர் சொன்ன காரணம் ரசிகர்கள் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தேவையில்லாமல் என் பெயரில் அவர்கள் நேரத்தை வீணடிக்கவேண்டியதில்லை. குடும்பத்தைக் கவனித்துக் கொண்ட பிறகு நேரம் கிடைத்தால் படத்தைப் பார்த்து ரசிக்கட்டும் என்றார்.
இப்போது ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தாலும் அஜித், ஆரம்பத்தில் பல ரொமாண்டிக் எமோஷனல் படங்களில் நடித்துள்ளார். அதில் சில படங்கள் டபுள் ஹீரோ சப்ஜெட்களாகவும் அமைந்தன. அப்படி அஜித் கார்த்தியோடு இணைந்து நடித்த படம்தான் ‘ஆனந்த பூங்காற்றே’. இந்த படம் 1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த படம்தான் ரோஜா கம்பைன்ஸ் மூவி காஜா மைதீன் தயாரித்த முதல் படமாகும். இந்த படம் பற்றி அவர் பேசியுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் “இந்த படத்துக்காக அஜித்திடம் பேசினோம். அவர் அப்போது கடனில் இருந்ததால் 22 லட்ச ரூபாய் சம்பளம் கேட்டார். அதை ஒரே தவணையாக கொடுத்தோம். ஆனால் அப்போது அவர் காலில் ஒரு பிரச்சனை இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது.
அதற்குள் நாங்கள் கார்த்திக்கை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் எடுத்துவிட்டோம். அதனால் அஜித்தை வைத்து வேறு படம் பண்ணிக் கொள்ளலாம் என்று இந்த படத்தில் பிரசாந்தை போடலாம் என முடிவு செய்தோம். அப்போது அஜித்துக்கு அறுவை சிகிச்சை நடக்க இருந்த நிலையில் அவரைப் பார்க்க சென்றோம்.
அப்போது என் கையைப் பிடித்துக் கொண்ட அஜித் “ஏன் ஜி நான் இந்த ஆப்பரேஷன் முடிந்து வரமாட்டேன் என நினைத்து விட்டீர்களா?… கண்டிப்பா வருவேன். வந்து படம் பண்ணுவேன்” எனக் கூறி கதறி அழுதார். அப்போதே நான் முடிவு செய்துவிட்டேன், இந்த படத்தில் அஜித்தான் நடிக்க வேண்டும் என்று. அதன் பின்னர் அவர் வந்து நடித்து படம் வெளியாகி நல்ல ஹிட் ஆனது” எனக் கூறியுள்ளார்.