தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ந.சுப்பிரமணியன் அக்கட்சியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் போன்ற மூத்த தலைவர்களின் பெயர்கள் தவெக வருகையோடு தொடர்புபடுத்தப்பட்ட நிலையில், தற்போது ந.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளார். நேற்றிரவு விஜய்யை நேரில் சந்தித்த அவர், தனது ஆதரவை உறுதிப்படுத்தினார். 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு களம் காணும் விஜய்க்கு, அனுபவம் வாய்ந்த முன்னாள் அமைச்சர்களின் வருகை கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ந.சுப்பிரமணியன், கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக 2011-16 காலகட்டத்தில் திறம்படப் பணியாற்றியவர். அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் செல்வாக்கு மிக்க ஒரு முன்னாள் அமைச்சர், தற்போது தவெகவில் இணைந்திருப்பது டெல்டா மாவட்ட அரசியலில் புதிய மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளது.
