கரூர் அரசியல் களத்தில் திமுகவின் அசுர பலம் கொண்ட அமைச்சராகக் கருதப்படும் செந்தில் பாலாஜியை வீழ்த்த, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது ஒரு அதிரடி வியூகத்தை வகுத்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் 1,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த விஜயபாஸ்கர், இம்முறை எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். இதற்காகத் தனது தேர்தல் களப்பணியை தற்போதே முடுக்கிவிட்டுள்ள அவர், கட்சி நிர்வாக அமைப்பில் பெரும் மாற்றங்களைச் செய்து கரூர் அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த வியூகத்தின் ஒரு பகுதியாக, கரூர் மாநகராட்சி மற்றும் ஒன்றியப் பகுதிகளில் உள்ள அதிமுக நிர்வாகிகளை மாற்றியமைத்து புதிய பொறுப்பாளர்களை விஜயபாஸ்கர் நியமித்துள்ளார். குறிப்பாக, கரூர் நகரப் பகுதிச் செயலாளராக இருந்த ஜெயராஜை நீக்கிவிட்டு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திமுகவிலிருந்து விலகி சமீபத்தில் அதிமுகவில் இணைந்த ‘தாந்தோணி’ ரவியை அந்தப் பதவிக்கு நியமித்துள்ளார். நீண்டகால அதிமுகவினர் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், தாந்தோணி பகுதியில் அதிக வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டதாக விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், கரூர் ஒன்றியத்தைப் பிரித்து மூன்று புதிய ஒன்றியச் செயலாளர்களை நியமித்துள்ளதோடு, மாநகராட்சிப் பகுதிகளை ஆறாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனிப் பொறுப்பாளர்களை வழங்கியுள்ளார். அதிக வாக்குகள் உள்ள பகுதிகளில் செந்தில் பாலாஜிக்குக் கிடைக்கும் முன்னிலையைக் குறைப்பதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. புதிய பொறுப்பாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கி, செந்தில் பாலாஜியை வீழ்த்துவோம் எனச் சபதமேற்று களம் இறங்கியுள்ளனர்.
இருப்பினும், அதிமுகவின் இந்த “ஆப்பசைக்கும்” திட்டத்தைக் கண்டு திமுகவினர் அஞ்சியதாகத் தெரியவில்லை. கடந்த முறை சுயேச்சையாகப் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்றவர்களை வைத்துக்கொண்டு செந்தில் பாலாஜியை வீழ்த்த முடியாது எனத் திமுக தரப்பு விமர்சிக்கிறது. ஐந்து முறை தேர்தலில் வென்றுள்ள செந்தில் பாலாஜியின் செல்வாக்கிற்கு முன்னால் விஜயபாஸ்கரின் இந்த ராஜதந்திரங்கள் எடுபடாது என்றும், அவர் கனவில் கூட ஜெயிக்க முடியாது என்றும் திமுக நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் கரூர் தொகுதியில் அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
