செம குட் நியூஸ்..! இதய செயலிழப்பை 5 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கும் AI… மருத்துவ உலகில் ஒரு புரட்சிகர கண்டுபிடிப்பு…!!

By Soundarya on சித்திரை 10, 2026

Spread the love

இதய செயலிழப்பை 5 ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாகக் கண்டறியும் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதயத் தசைகள் பலவீனமடையும் போது, அதைச் சுற்றியுள்ள கொழுப்பு அடுக்குகளில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்களை இந்த ஏஐ கருவி நுணுக்கமாகக் கண்டறிகிறது. வழக்கமான சிடி ஸ்கேன் (CT Scan) சோதனைகளில் கூட மனிதக் கண்களுக்குத் தெரியாத இந்த மாற்றங்களை பகுப்பாய்வு செய்து, ஒருவருக்கு இதய செயலிழப்பு ஏற்படும் அபாயம் எவ்வளவு உள்ளது என்பதைக் கணக்கிட்டு இந்த ஏஐ மென்பொருள் ‘ரிஸ்க் ஸ்கோர்’ (Risk Score) வழங்குகிறது.

இங்கிலாந்தில் உள்ள 9 மருத்துவமனைகளில் சுமார் 72,000 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வில், இந்த ஏஐ கருவியின் முடிவுகள் 86% துல்லியமாக இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இதில் ‘அதிக ஆபத்து’ பிரிவில் வகைப்படுத்தப்பட்டவர்களுக்கு, அடுத்த 5 ஆண்டுகளில் இதய செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு மற்றவர்களை விட 20 மடங்கு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தை மருத்துவமனைகளில் எடுக்கப்படும் வழக்கமான சிடி ஸ்கேன்களுடன் இணைப்பதன் மூலம், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே நோயைக் கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்க முடியும்.

   

இந்த ஏஐ கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. தற்போது இளவயதினரிடையே திடீர் இதய செயலிழப்பு அதிகரித்து வரும் நிலையில், இத்தொழில்நுட்பம் அதிக உயிரிழப்புகளைத் தடுக்க உதவும் என்று நம்பப்படுகிறது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படும் இதயப் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து எச்சரிப்பதன் மூலம், நோயாளிகள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றி இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இந்தத் தொழில்நுட்பம் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும். இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஆரோக்கியமான உணவு முறை, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் புகைபிடித்தலைத் தவிர்ப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்வது மிக அவசியமாகும்