அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டும் அதன் பெருமையை ஏற்றுக்கொள்ளும் இபிஎஸ், தோல்விக்கு மட்டும் பொறுப்பேற்காமல் மாவட்ட செயலாளர்கள் மீது பழியைப் போடுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், திமுகவுடனான பேச்சுவார்த்தை உள்ளிட்ட விவகாரங்களிலும் இபிஎஸ் மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
சி.வி. சண்முகத்தின் இக்குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடும் பதிலடி கொடுத்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் பரிந்துரை செய்தவர்களையே இபிஎஸ் வேட்பாளர்களாக அறிவித்தார் என்றும், அனைவரும் சரியாகப் பணியாற்றியிருந்தால் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கத் தலைமைக் கழகம் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தவர்கள், தங்கள் தவறுகளை மறைப்பதற்காகவே இபிஎஸ் மீது குற்றம் சுமத்துவதாகச் சாடினார்.
திமுகவுடன் இபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தினார் என்ற குற்றச்சாட்டை 100 சதவீதம் மறுத்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதுபோன்று எதுவும் நடக்கவில்லை எனச் சத்தியம் செய்து கூற முடியும் என்றார். சட்டமன்ற உறுப்பினர்களான தாங்கள் எப்போதும் இபிஎஸ் உடன்தான் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அதிமுக வெற்றி பெற்ற இடங்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் உழைப்பும், கூட்டணிக் கட்சிகளின் பலமுமே முக்கியக் காரணம் எனத் தெரிவித்தார்.
