ஜெயலலிதா தூக்கியவர்.. காப்பாற்றியதே எடப்பாடி தான்…. சி.வி. சண்முகத்தின் முகத்திரையைக் கிழித்த அக்ரி… அதிமுகவை உலுக்கும் அடுத்த கட்ட மோதல்….!

By Nanthini on ஆவணி 11, 2026

Spread the love

அதிமுகவின் உட்கட்சி மோதல் தற்போது பெரும் அரசியல் புயலாக உருவெடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் கடுமையாக விமர்சித்துள்ளார். “வலுவான தலைமை தேவை என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமியைத் தேர்வு செய்தோம். ஆனால், அவரது தலைமையில் சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுகவால் வெற்றிபெற முடியவில்லை. வெற்றி பெற்றால் அது பொதுச்செயலாளரின் செல்வாக்கு என்றும், தோல்வி அடைந்தால் மாவட்டச் செயலாளர்கள் தான் பொறுப்பு என்றும் கூறுவது நியாயமற்றது” என்று சாடியுள்ளார். மேலும், தோல்விக்கான காரணங்களை ஆராய வலியுறுத்திய அவர், திமுகவுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சத்தியம் செய்ய முடியுமா என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சி.வி. சண்முகத்தின் இந்த விமர்சனங்களுக்கு அதிமுக மூத்த தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என உறுதியளித்த அவர், மாவட்ட வாரியாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சி.வி. சண்முகம் ஏன் கலந்துகொள்ளவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார். “1996-ல் ஜெயலலிதா தலைமையிலேயே அதிமுக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது, ஆனால் அதன்பின் மீண்டு வரவில்லையா?” என்று சுட்டிக்காட்டியவர், ஜெயலலிதாவால் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சி.வி. சண்முகத்திற்கு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் வாய்ப்பளித்து வெற்றிபெறச் செய்தார் என்பதையும் நினைவூட்டியுள்ளார்.

   

இதனிடையே, 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நகர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் தவெகவை அதிமுக ஏன் ஆதரிக்கக் கூடாது என்றும் சி.வி. சண்முகம் கேள்வி எழுப்பி, உட்கட்சிப் பூசலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

   

திமுகவுடன் அதிமுக கூட்டணி அல்லது மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்துவதாக எழும் குற்றச்சாட்டுகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி முற்றிலும் மறுத்துள்ளார். “திமுகவுடன் அதிமுக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனத் தன்மீது சத்தியம் செய்ய முடியும்” என்று கூறிய அவர், விழுப்புரத்தில் சி.வி. சண்முகம் தோல்வியைத் தழுவியதற்கான உண்மையான காரணங்களை முதலில் யோசிக்க வேண்டும் என்று சாடியுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே முற்றியுள்ள இந்த வார்த்தைப் போர், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.