தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிகர் விஜயகாந்த் இறந்த செய்தி கேட்டதும் உடனே ஷூட்டிங்கை ரத்து செய்து விட்டு சென்னைக்கு வந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கண்ணீருடன் அவர் அஞ்சலி செலுத்திய காட்சிகள் ரசிகர்களின் மனதை கலங்கடித்தது. இதைத்தொடர்ந்து இன்று அவர் நெல்லை மக்களுக்கு உதவி செய்ய நேரடியாக சென்னையிலிருந்து நெல்லை சென்றுள்ளார்.
தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை காரணமாக தற்போது அங்கே மக்கள் வெள்ளத்தில் தவித்து வருகின்றனர். கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளநீர் புகுந்து தங்களது வீடுகளை ஏராளமான மக்கள் இழந்துள்ளனர். ஏகப்பட்ட விவசாய நிலங்களும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
தற்போது நிற்கதியாய் நிற்கும் இந்த மக்களுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தங்களால் இயன்ற அளவு உதவி செய்து வருகின்றனர். ஏற்கெனவே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் இன்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கேடிசி நகரில் 1000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். ஏற்கனவே இவர் 10 மற்றும் 12 வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவத்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்பொழுது இவர் வெள்ள நிவாரண நிதி வழங்குவது என இப்படி பொதுமக்கள் சார்ந்து பல நற்காரியங்களை செய்து வருவது இவரின் அரசியல் நகர்வாகவே பார்க்கப்பட்டு வருகிறது.