தமிழ்நாட்டில் மிக முக்கியமான பிரபலமான உணவகங்களில் ஒன்று அடையார் ஆனந்த பவன் ஆகும். இது உயர்தரசைவ உணவகம் ஆகும் சென்னையில் உள்ள பழமையான உணவகங்களில் இதுவும் ஒன்று. அடையார் ஆனந்தபவன் இந்தியாவில் 150 க்கும் மேல் கிளைகளை கொண்டுள்ளது. இது மட்மல்லாமல் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா,கென்யா, கனடா போன்ற நாடுகளிலும் தனது கிளைகளை கொண்டுள்ளது.
இத்தனை சிறப்புடைய அடையார் ஆனந்த பவன் ஒரு சாதாரண மனிதரால் உருவாக்கப்பட்டது என்றால் நம்பமுடிகிறதா? ஆம். உழைப்பு மற்றும் விடாமுயற்சியினால் ஒரு சாதாரண மனிதனும் ஜெயிக்கமுடியும் என்பதை உணர்த்திய இந்நிறுவனத்தின் வரலாறு என்ன என்பதை இனிக் காண்போம்.

அடையார் ஆனந்த பவனின் உரிமையாளர் கே எஸ் திருப்பதி ராஜா ஆவார். இவர் சிறு வயதில் வறுமையின் காரணமாக சென்னை மற்றும் மும்பையில் டேபிள் கிளீனராக பணிபுரிந்தார். பணி புரியும் போதே சமையல் கலையிலும் இனிப்பு தயாரிக்கும் கலையிலும் தேர்ச்சி பெற்றார். ஒரு கட்டத்தில் அவர் தங்களது பரம்பரை சொத்தில் விவசாயம் செய்ய பெற்றோர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜபாளையத்திற்கு திரும்பினார்.
தன் பெற்றோர்களுக்காக விவசாயத்தில் கடுமையாக உழைத்தார்கே.எஸ். திருப்பதி ராஜா. ஆனாலும் ஒரு உணவகம் மற்றும் இனிப்பு கடையை திறக்க வேண்டும் என்ற கனவு அவரை தூங்க விடாமல் செய்தது. அதன் விளைவாக 1960 ஆம் ஆண்டில் அவர் சொந்த ஊரான ராஜபாளையத்தில் “குரு ஸ்வீட்ஸ்” என்ற பெயரில் ஒரு சிறிய இனிப்பு கடையை தொடங்கினார்.விவசாயத்தில் நஷ்டம் ஏற்படவே சொந்த ஊரை விட்டுவிட்டு 1970களில் நடுப்பகுதியில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் பெங்களூருக்கு குடி பெயர்ந்தார். அங்கு தனது கனவை தொடர நினைத்த கே எஸ் திருப்பதி ராஜா “ஸ்ரீனிவாசா ஸ்வீட்ஸ்” நிறுவனத்தை நிறுவினார். தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் இந்த இனிப்பு கடையை வளர்க்க பெரிதும் பாடுபட்டு உழைத்தார். அவர்களின் கடின உழைப்பால் ஸ்ரீனிவாசா ஸ்வீட்ஸ் பிரபலம் அடைந்தது.

அதற்குப் பிறகு 1979 ஆம் ஆண்டு கே எஸ் திருப்பதி ராஜா அவரது மகன்கள் கே டி வெங்கடேசன் மற்றும் கே டி ஸ்ரீனிவாசா ராஜாவுடன் சென்னை வண்ணாரப்பேட்டையில் தங்களது முதல் கடையை திறந்தனர். அதற்கு ஆனந்த பவன் என்று பெயரிட்டனர். இந்தக் கடை மிகப் பிரபலமடைந்து அவரது வணிகம் செழித்தது. விரைவில் இரண்டாவதாக அடையாறில் ஆனந்த பவன் என்ற பெயரிலேயே கடையை திறந்தார். இந்த கடையில் புகழ் சென்னை முழுவதும் பரவியது. வாடிக்கையாளர்கள் இவரின் கடையை தேடி வர ஆரம்பித்தனர். இந்த கடையில் வெற்றியின் அடையாளமாக அடையார் பெயர் இணைக்கப்பட்டு அடையாறு ஆனந்த பவன் ஆனது.

அடையார் ஆனந்த பவன் இனிப்புகள் சுவையானதாகவும் தரமானதாகவும் இருந்ததால் குறைந்த காலத்திலேயே அதிக பேரும் புகழும் பெற்றது. இந்தியா முழுவதும் கிளைகளை ஆரம்பித்தனர். 2005 ஆம் ஆண்டு அடையார் ஆனந்த பவனில் A2B என்ற பெயரில் உணவகங்களை தொடங்கி தங்கள் வணிகத்தின் அடுத்த கட்டத்திற்கு சென்றனர்.அதுவும் மிகப் பிரபலம் அடைந்தது. உலகின் பல்வேறு நாடுகளில் அடையார் ஆனந்த பவனின் கிளைகள் உருவாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நான்கு பேருடன் ஆரம்பித்த இந்த நிறுவனம் இன்று 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு உலகெங்கிலும் இந்த பெயர் பிரபலமாகி கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண மனிதன் 1000 ரூபாய் டேர்ன்ஓவரை 1000 கோடி டேர்ன்ஓவராக தனது உழைப்பு மற்றும் விடாமுயற்சியினால் மட்டுமே சாதித்த பெருமைக்குரிய தமிழர் கே. எஸ். திருப்பதி ராஜா ஆவார்.
