தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணி, பிரச்சாரம் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை என மும்முறமாக செயல்பட்டு வருகின்றன. அதே சமயம் அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற காலம் இருந்த நிலையில் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே விஜய் தொடர்ந்து திமுகவை எதிர்த்து வருவதால் அவரை தங்கள் கூட்டணியில் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் 2026 தேர்தலில் திமுகவை தோற்கடிக்க அனைத்து அஸ்திரங்களையும் அதிமுக பயன்படுத்தும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். திமுகவை விஜய் கடுமையாக எதிர்ப்பதாகவும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற மையக்கருத்தை அவர் பேசுவதாகவும் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். எனவே திமுகவை தோற்கடிக்க அதிமுக எல்லா கட்சிகளிடமும் பேசும், அழைப்பு விடுக்கும் என்று அவர் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
