“100 கோடி கோயில் நிலம் ஒரே நாளில் கைமாறியதா?”…. பழனியில் அரங்கேறிய அந்த ‘ஒரு நாள் கூத்து’… இபிஎஸ் வெளியிட்ட பரபரப்பு அறிவிக்கை….!

By Nanthini on ஆடி 25, 2026

Spread the love

பழனி தண்டாயுதபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் முறைகேடாகத் தனியாருக்குப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம் பக்தர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை உதாசீனப்படுத்தி, கொடைக்கானல் சார் பதிவாளரை மாற்றலாகக் கொண்டுவந்து ஒரே நாளில் இந்த மோசடிப் பதிவு நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அறநிலையத் துறையின் பராமரிப்பில் இருந்த கோயில் சொத்துக்கள் பறிபோவதைத் தடுக்கத் தவறியதோடு, தவறான வழியில் பத்திரப் பதிவு செய்த அதிகாரி மற்றும் நிலத்தை வாங்கிய நபர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்காமல் அரசு தாமதித்து வருகிறது. தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சிபிசிஐடி விசாரணையானது, உண்மையான குற்றவாளிகளையும் அதற்குப் பின்னணியில் உள்ளவர்களையும் காப்பாற்றும் நோக்கில் நடத்தப்படும் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே தோன்றுகிறது.

   

அரசின் இந்தச் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளையும், கண்ணாமூச்சி ஆட்டத்தையும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். திருக்கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கும் கடமையுணர்வுடன், நில மோசடியில் ஈடுபட்ட முதன்மை குற்றவாளிகளைக் கண்டறியவும், உண்மை நிலை வெளிவரவும் இவ்வழக்கை உடனடியாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

   

இப்பிரச்சினையைக் கண்டித்தும், முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அதிமுக சார்பில் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகம் இணைந்து பழனி மயில் ரவுண்டானா அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கோயில் சொத்துக்களை மீட்டெடுக்க ஆன்மீகவாதிகளும் பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு குரல் கொடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.