எடப்பாடி வீசிய தூண்டில்… “போனா போங்க!”…. ஒன்றுதிரண்டு சீனியர்ஸ்…. இபிஎஸ்-க்கு செக் வைக்கும் 4 விஐபிக்கள்… சூடாகும் தமிழக அரசியல்…!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

அதிமுகவில் சற்றே ஓய்ந்தது போலத் தோன்றிய உட்கட்சிப் பூசல்கள், தற்போது மீண்டும் நீறுபூத்த நெருப்பாக உருவெடுத்துள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள், மூத்த தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி போன்ற முக்கியத் தலைவர்கள் அதிமுக தலைமை மீது தீவிர கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் குறுகிய காலத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி, அதிமுகவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தவெக-வுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற மூத்த தலைவர்களின் ஆலோசனையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததே தற்போதைய பிளவுகளுக்கு வித்திட்டதாகக் கருதப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, முக்கிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் சிலர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் கடந்து தவெக பக்கம் சாயத் தொடங்கியது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தியாளர்கள் ஒன்றிணைந்து, பொதுக்குழு மற்றும் செயற்குழுவைக் கூட்டுவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டையும் நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கட்சி ஆலோசனைக் கூட்டங்களைப் புறக்கணித்து வரும் இத்தலைவர்கள், தலைமைக்கு எதிராகத் தனி அணியாகச் செயல்படத் திட்டமிட்டுள்ளதால் கட்சி மீண்டும் பிளவுபடும் சூழல் உருவாகியுள்ளது.

   

இந்தச் சூழலில், அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காகச் சில முன்னாள் அமைச்சர்கள் தூதுவர்களாக மாறிச் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டாலும், “விலகியவர்கள் விலகியதாகவே இருக்கட்டும், இருப்பவர்களை அரவணைத்துச் செல்வோம்” என்ற நிலைப்பாட்டில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். எவ்வாறாயினும், மூத்த தலைவர்களைச் சமாதானப்படுத்தி உட்கட்சி நெருக்கடிக்குத் தீர்வு காண அவர் ஒரு புதிய குழுவைக் களத்தில் இறக்கியுள்ளார்.