தமிழக அரசியல் களம் தற்போது தவெக மற்றும் அதிமுக இடையே நடக்கும் நிழல் யுத்தத்தால் சூடுபிடித்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் 47 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி அணி (22 எம்எல்ஏக்கள்), சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி அணி (25 எம்எல்ஏக்கள்) என இரு பிரிவாக உடைந்தனர். இந்தச் சூழலைப் பயன்படுத்திய முதல்வர் விஜய், சி.வி.சண்முகம் தரப்பை நேரில் சந்தித்து ஆதரவு கோரியதாகக் கூறப்படுகிறது. அதன்படியே, விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு அந்த 25 எம்எல்ஏக்களும் ஆதரவாக வாக்களித்தனர். தங்களுக்குப் புதிய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்த நிலையில், விஜய் அவர்களைச் சேர்க்காததால் தகுதி நீக்க நடவடிக்கை பாயும் சூழல் உருவானது.
இதன் விளைவாக, சி.வி.சண்முகம் அணியைச் சேர்ந்த மரகதம் குமாரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிரடியாகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் சி.வி.சண்முகம் அணியின் பலம் 21 ஆகக் குறைந்தது. தகுதி நீக்க பயம் மற்றும் அரசியல் எதிர்காலம் காரணமாக, அந்த அணியில் இருந்த மற்ற எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து மீண்டும் அவருடன் கைகோர்த்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியுள்ள நிலையில், தற்போது சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவர் மட்டுமே தனியாக எஞ்சியுள்ளனர். எடப்பாடியின் தலைமையில் செயல்பட விரும்பாத இவர்களும் விரைவில் தவெகவில் இணையலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.
இந்த நான்கு எம்எல்ஏக்களின் திடீர் ராஜினாமாவின் பின்னணியில் மிகப்பெரிய அளவில் குதிரை பேரமும், பணப் பரிமாற்றமும் நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. ஆசை வார்த்தைகளைக் காட்டி, கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விஜய் தங்களது எம்எல்ஏக்களை இழுத்துக்கொண்டதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு குற்றம் சாட்ட, தவெக இதனைத் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்த அரசியல் மோதலின் உச்சகட்டமாக, அதிமுக ராஜ்யசபா எம்பி தனபால் தனது எக்ஸ் (X) வலைதளப் பக்கத்தில், அண்ணா திமுகவை உடைக்க நினைக்கும் தவெகவின் சதியை முறியடிக்கவும், ஜனநாயகத்தைக் காக்கவும் மத்திய அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை (ED) விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் இதுவரை நீதிமன்றத்திலோ அல்லது மத்திய அமைச்சர்களிடமோ அதிகாரப்பூர்வமாக எந்தவொரு புகாரோ, வழக்கோ தாக்கல் செய்யப்படவில்லை. ஆனாலும், எம்பி தனபாலின் இந்த டிமாண்ட் அரசியல் வட்டாரத்தில் மிக முக்கிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்து இத்தனை நாட்களாகியும் முதல்வர் விஜய் இன்னும் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்துப் பேசவில்லை என்பதும், அதேநேரம் எடப்பாடிக்கு குடைச்சல் கொடுக்கும் சி.வி.சண்முகம் தரப்பை வளைக்க முயல்வதும் அதிமுகவை உஷார்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுவதைத் தடுக்கவும், தவெகவிற்கு அரசியல் ரீதியாக முட்டுக்கட்டை போடவுமே அதிமுக இந்த சிபிஐ, அமலாக்கத்துறை அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
