“இன்பத்துரை அடித்த ஒரே அடி”… அலறி அடித்து நட்சத்திரப் பட்டியலை மாற்றி அமைத்த தவெக…. கடைசி நேரத்தில் மாறிய ஆட்டம்….!

By Nanthini on புரட்டாதி 22, 2026

Spread the love

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், தவெக சார்பில் வெளியிடப்பட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் அடங்கிய பட்டியல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் பட்டியலில் தவெக தலைவர் விஜய்யின் பெயருடன், கூட்டணித் தலைவர்களான வைகோ, திருமாவளவன், துரை வைகோ, ரவிக்குமார், காதர் மொய்தீன் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுக, பாஜக உள்ளிட்ட எதிர்த்தரப்பு கட்சிகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தவெக தலைமை தனது நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்து கூட்டணித் தலைவர்களின் பெயர்களை அவசர அவசரமாக நீக்கியது. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக அதிமுக செய்தித் தொடர்பாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான இன்பத்துரை தவெகவின் நடவடிக்கை குறித்துக் கடுமையாக விமரிசித்துள்ளார். நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியல் என்பது தவெக கட்சியின் விருப்பப்படி மாற்றிக் கொள்ளக்கூடிய உள்கட்சி அறிவிப்பு அல்ல என்றும், அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (R.P. Act, 1951) மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   

இது குறித்து தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இன்பத்துரை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 77(1)-ன் படி, தேர்தல் அறிவிக்கை வெளியான 7 நாட்களுக்குள் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பட்டியலில் உள்ள ஒருவர் இறந்துவிட்டாலோ அல்லது அந்த கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலோ மட்டுமே அவருக்குப் பதிலாக புதியவரைச் சேர்க்க சிறப்பு விதி அனுமதிக்கிறது. எனவே, நினைத்த நேரத்தில் பெயர்களைச் சேர்ப்பதும் நீக்குவதும் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

   

மேலும், வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோரின் பெயர்களை தவெக தங்களது பட்டியலில் இருந்து தற்போது நீக்கியுள்ளதால், அவர்கள் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் தவெக வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்தால் அவர்களுக்கு “நட்சத்திரப் பேச்சாளருக்கான” செலவு விலக்கு சலுகை பொருந்தாது என்றும் இன்பத்துரை தெரிவித்துள்ளார். அவ்வாறு அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளும் பட்சத்தில், அதற்கான அனைத்துச் செலவுகளும் பிரிவு 77 மற்றும் தேர்தல் ஆணையத்தின் செலவு கண்காணிப்பு விதிகளின்படி, சம்பந்தப்பட்ட தவெக வேட்பாளர்களின் சொந்தத் தேர்தல் செலவுக் கணக்கிலேயே சேர்க்கப்பட வேண்டும் என்பதே சட்ட நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்