அதிமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்து தவெகவின் வெற்றி மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தமிழக வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் தற்போது குதிரை பேரம் கொடி கட்டிப் பறப்பதாகவும், மதுராந்தகம் இடைத்தேர்தலில் டிபன் பாக்ஸ்களில் வைத்து பணம் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தவெக தற்காலிக வெற்றியை மட்டுமே பெற்றுள்ளதாகவும், இடைத்தேர்தலில் நடிகர் விஜய் தனது வித்தை மற்றும் கவர்ச்சியை காட்டியே வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஐம்பது கோடி ரூபாய்க்கு விலை பேசி வாங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அதிமுக, திமுக போன்ற கட்சிகள் கூட இதுபோன்ற தரம் கெட்ட அரசியலில் ஈடுபது கிடையாது எனவும் சாடினார்.
எம்ஜிஆருக்கு நிகர் எம்ஜிஆர் மட்டுமே என்றும், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் எந்நாளும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அதிமுக கூட்டணியில்தான் நீடிக்கிறது என்றும், சில அமைச்சர்கள் இணைந்து தவெகவை கபளிகரம் செய்ய முயன்று வருவதாகவும் அவர் அந்தச் சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.
