“போங்க தம்பி.. இனி ‘AI’ தான் எல்லாம்”… நிர்வாகிகளுக்கு இபிஎஸ் கொடுத்த ஷாக் ட்ரீட்… அதிமுக ஐடி விங்கில் எடப்பாடி கொண்டு வரும் ‘மெகா’ மாற்றம்….!

By Nanthini on ஆடி 9, 2026

Spread the love

அதிமுக தலைமை அலுவலகமான ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்று கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி மற்றும் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சூழலில், தவெக ஆதரவு நிலைப்பாட்டால் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் இக்கூட்டத்தைப் புறக்கணித்தது கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இக்கூட்டத்தில் நிர்வாகிகளிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, அண்மைய தேர்தல்களில் அதிமுக ஐடி விங்கின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை எனத் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தவெகவினர் சமூக வலைதளங்களை மட்டுமே பிரதானமாகப் பயன்படுத்தி, தங்களது கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து ஆட்சியைப் பிடித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டிய அவர், அந்த அளவுக்கு அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி சுறுசுறுப்பாகச் செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.

   

இதனைத் தொடர்ந்து அதிமுக ஐடி விங்கில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வர இபிஎஸ் திட்டமிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் வெறும் சமூக வலைதளப் பகிர்வுகளோடு நின்றுவிடாமல், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் திறம்படவும், புத்திசாலித்தனமாகவும் கையாளத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே ஐடி விங்கில் முக்கியப் பதவிகள் வழங்கப்படும் என்று அவர் அதிரடியாக அறிவித்துள்ளார். காலத்திற்கேற்ப தொழில்நுட்பத்தை மாற்றிக்கொண்டால் மட்டுமே அரசியல் களத்தில் வெல்ல முடியும் என்பதை அவர் இதன் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.

   

அதே நேரத்தில், தேர்தல் தோல்விக்கு ஐடி விங் மட்டுமே முழுமுதற் காரணம் கிடையாது என்றும், கட்சியின் பிற சார்பு அணிகளும் தங்களது பணிகளைச் சரியாகச் செய்யவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு விவசாயிகளின் கஷ்டங்கள் தெரியாது என்பதால், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெற அனைத்து சார்பு அணிகளும், தொண்டர்களும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.