அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், திருச்சியின் முக்கிய அரசியல் முகங்களுமான வெல்லமண்டி நடராஜன் திடீரென தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் அணியில் நீண்ட காலம் பயணித்து, கடந்த தேர்தலுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்த இவருக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்தார். இந்தச் சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்த அவர், அதிமுகவிலிருந்து விலகியதற்கான காரணங்களைச் செய்தியாளர்கள் சந்திப்பில் விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
அதிமுகவின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிப் பேசிய வெல்லமண்டி நடராஜன், “இரண்டு கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரு மாபெரும் எழுச்சிமிகு இயக்கம் இன்று சிதறி, சின்னாபின்னமாகிப் போயிருப்பது பார்ப்பதற்கே மிகுந்த சங்கடமாக உள்ளது” என்று வேதனை தெரிவித்தார். தொடர்ந்து 11 தோல்விகளைச் சந்தித்த பிறகும், “மீண்டும் அதிமுகவை அரியணையில் அமர வைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது” என்று தற்போதைய தலைமையிலிருந்து ஒருவர்கூட முன்வந்து சொல்லவில்லை என்று காரசாரமாகக் குற்றம் சாட்டினார். தோல்விகளுக்குப் பொறுப்பேற்கத் தவறியதே கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம் என்றும் அவர் சாடினார்.
தலைமைக் கழகத்தின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், “மக்களையும் இளைஞர்களையும் ஈர்த்து கட்சியை வளர்த்தவர் எம்ஜிஆர். ஆனால், இன்றைய அதிமுகவில் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள். இப்படி ஒவ்வொருவரையும் மைனஸ் செய்து கொண்டே போனால் கட்சி எப்படி வளரும்?” என்று கேள்வி எழுப்பினார். இதன் விளைவாகவே, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி 80 லட்சமாகக் குறைந்துவிட்டதாகவும், நாங்குநேரி போன்ற இடைத்தேர்தல்களில் வெறும் 5,000 வாக்குகளை மட்டுமே பெறும் நிலைக்குக் கட்சி தள்ளப்பட்டுள்ளது என்றும் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினார்.
தவெகவில் இணைந்தது குறித்துப் பேசிய அவர், அண்ணா, பெரியார், எம்ஜிஆர் ஆகியோரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள தவெகவை மக்கள் பெருவாரியாக ஆதரித்து, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தந்துள்ளனர் என்றார். மக்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைவராக விஜய் உருவெடுத்துள்ளார் என்று பாராட்டிய வெல்லமண்டி நடராஜன், “ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா, பெரியார் ஆகியோரின் புகழைப் பாடக்கூடிய ஒரு சிறந்த தலைவராகவே நான் தவெக தலைவர் விஜய்யைப் பார்க்கிறேன்” என்று கூறி தனது அரசியல் மாற்றத்தை நியாயப்படுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…