தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்து விலகி ஆதரவளித்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தவெக வெற்றிகரமாகக் கூட்டணி ஆட்சியை அமைத்தது. இந்த புதிய அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இதற்கிடையில், அதிமுகவின் தொடர் தோல்விகளால் அதிருப்தியடைந்த எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான 24 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்ததோடு, முதல்வர் விஜய் சட்டசபையில் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கும் ஆதரவாக வாக்களித்து நிலைகுலையச் செய்தனர்.
இந்த அரசியல் அதிரடிகளுக்கு மத்தியில், அதிமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, மரகதம், குமரவேல், சத்தியபாமா ஆகிய 5 முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருபடி மேலே சென்று தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்தனர். அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்த இவர்களின் பின்னணியில் ஒரு பலமான அரசியல் கணக்கு இருந்தது. தவெகவின் தற்போதைய அசுர வேக அலையைப் பயன்படுத்தி, மீண்டும் அதே தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் தவெக சின்னத்தில் போட்டியிட்டு எளிதாக வெற்றி பெற்று, புதிய அமைச்சரவையில் இடம் பிடித்துவிடலாம் என்பதே இவர்களின் பிரதான திட்டமாக இருந்தது.
ஆனால், இவர்களின் இந்த கணக்கு தற்போது தலைகீழாக மாறும் சூழல் உருவாகியுள்ளது. பொதுத்தேர்தல் முடிந்து சில நாட்களிலேயே, சுயநல அரசியலுக்காக தங்களின் பதவிகளை ராஜினாமா செய்த இந்த 5 பேர் மீதும் அந்தந்த தொகுதி மக்களிடையே கடுமையான அதிருப்தி நிலவுவதாக உளவுத்துறை மற்றும் தவெகவின் உள்வட்டார ஆய்வுகள் எச்சரித்துள்ளன. இதனால், இவர்களை மீண்டும் அதே தொகுதிகளில் நிறுத்தினால் தவெகவிற்கு தோல்வி முகம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கட்சித் தலைமை உணர்ந்துள்ளது. தொகுதி மக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் இந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்க தவெக தலைமை கடும் தயக்கம் காட்டி வரும் நிலையில், எப்படியும் அமைச்சர் ஆகிவிடலாம் என்று ஆசைப்பட்ட அந்த 5 பேருக்கும் இந்தத் தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
