“9-5 டெஸ்க் ஜாப் பார்க்கும் முதல்வர்?”…. தவெக நிர்வாகிகளிடம் இருந்துதான் பெண்களை காப்பாற்ற வேண்டும்… EPS கிளப்பிய புதிய சர்ச்சை…!

By Nanthini on ஆனி 19, 2026

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி தற்போதைய முதலமைச்சரை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இளம்பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றியச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தை சுட்டிக்காட்டி அவர் தனது எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்களைக் குற்றச் செயல்களில் இருந்து காக்க வேண்டியது அரசின் கடமை என்றும், ஆனால் கடந்த ஒரு மாத காலமாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்தால், தமிழக மக்களை—குறிப்பாக பெண்களை—ஆளுங்கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும் என்ற அவல நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

மேலும், தற்போதைய முதலமைச்சர் தனது கடமைகளைச் சரியாகச் செய்யாமல், முதல்வர் பதவியை ஒரு ‘9-5 டெஸ்க் ஜாப்’ போல சாதாரண அலுவலகப் பணியாகப் பார்ப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். அந்த 9 முதல் 5 மணி நேரத்திலாவது சட்டம் ஒழுங்கைக் காக்க அவர் ஏதேனும் உருப்படியான பணிகளைச் செய்தாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தவெக நிர்வாகிகள் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை ஒரு முதல்வராகவோ அல்லது கட்சித் தலைவராகவோ இந்த ‘பொய்க்கால் குதிரை அரசு’ என்ன செய்து தடுத்து நிறுத்தியது என்று வினவியுள்ள அவர், முதலமைச்சர் தனது வசம் உள்ள உள்துறையை வேறு ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகளையும் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, இளம்பெண் பாலியல் வழக்கில் கைதாகியுள்ள நபர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.