தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தற்போதே தீவிர தேர்தல் பணியில் களமிறங்கி விட்டன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இப்படியான நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற இந்த எழுச்சி பயணம் எனக்கும் என்னை போன்ற கோடி கணக்கான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ரத்தத்தின் ரத்தங்களுக்கும் உணர்த்தியது ஒன்றுதான்.
அதாவது ஆட்சிக்கு வந்த இந்த 52 மாதங்களில் மக்கள் விரோத ஸ்டாலின் failure model ஆட்சி பல பொய்களை மட்டுமே கூறி மக்களை மடைமாற்றம் செய்து வஞ்சித்துக் கொண்டே இருக்கின்றது. உங்களுடன் நான், எங்களுடன் நீங்கள் என்றெல்லாம் வெற்றி விளம்பரங்கள் மட்டுமே செய்து இந்த மக்கள் விரோத ஸ்டாலின் தன்னுடைய பித்தலாட்டத்தை தொடர்கிறார். தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மக்கள் நலத்தை தள்ளி வைத்துவிட்டு தமிழ்நாட்டை கொள்ளை அடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள். நமது எழுச்சி பயணத்தை தவறாக சித்தரித்து சம்மந்தியை மீட்போம், சம்பாதித்த பணத்தை காப்போம், மக்களை மறப்போம், தமிழ்நாட்டை வெறுப்போம், மகனைக் காப்போம் என என் மீது அவதூறு பரப்பி இருக்கிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்றால், மந்தி தனது குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் என்ற பழ மொழிக்கு ஏற்றது போல ஸ்டாலின் அமைச்சர் நேருவை விட்டு அறிக்கை என்ற பெயரில் ஆழம் பார்க்கிறார். அதாவது நேருவின் ஆழ்மனதில் ஸ்டாலினை பற்றி உள்ள எண்ணம், மருமகனை காப்போம், மகனைக் காப்போம், ரியல் எஸ்டேட் மூலம் தமிழ்நாட்டை கூறு போட்டு விற்போம், மக்களை மறப்போம், போதை பழக்கத்தை பரப்புவோம், இயற்கை வளங்களை சுரண்டுவோம், பல்லாயிரம் கோடி கணக்கில் கொள்ளை அடிப்போம், சொத்துக்களை வெளிநாட்டில் முதலீடு செய்து ஊழல் பணத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரவும் என்ற அவர்களின் எண்ணத்தை கூறும் விதமாகவே அமைச்சர் நேருவின் பேச்சுகள் உள்ளது. மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம். மக்கள் விரோத ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
