அதிமுகவின் மாநில துணை கொள்கைப் பரப்புச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த திருநங்கை அப்சரா ரெட்டி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது கொண்ட பற்றின் காரணமாக அதிமுகவில் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வந்த இவர், தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இருந்து விலகுவதாக தனது அறிக்கையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சந்தித்த தேர்தல்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் அதிமுக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று அதிமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டது. அத்துடன், சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்கள், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மற்றும் தவெகவில் நிர்வாகிகள் பலர் தொடர்ந்து ஐக்கியமாகி வருவது அதிமுகவிற்குத் தொடர் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.
தனது விலகல் குறித்து அப்சரா ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், “அதிமுகவுடனான எனது தொடர்பு வெறும் அரசியல் சார்ந்தது அல்ல; அது அம்மா (ஜெயலலிதா) மீது நான் கொண்ட ஆழ்ந்த அன்பிலும் நம்பிக்கையிலும் வேரூன்றியது. என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது மக்களை பிளவுபடுத்துவதாக இல்லாமல் ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டும். எந்தவித கசப்புணர்ச்சியும் இன்றி, எனது கொள்கைகளுக்கு உண்மையாக இருக்கும் பொருட்டே இந்த உணர்வுப்பூர்வமான முடிவை எடுத்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியை விட்டு விலகினாலும் தொடர்ந்து மக்களின் குரலாக ஒலிப்பேன் என்றும், மறைந்த தலைவர் ஜெயலலிதாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிப் பொதுச்சேவையைத் தொடருவேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் சமீபத்தில் தவெகவில் இணைந்த நிலையில், விரைவில் அப்சரா ரெட்டியும் தமிழக வெற்றி கழகத்தில் இணையக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
