“EPS முதல்வர்.. திருமாவளவன் துணை முதல்வர்”… ரகசிய உடன்படிக்கையில் ஸ்டாலின் – எடப்பாடி… யாரும் எதிர்பார்க்காத ‘கிளைமாக்ஸ்’…!

By Nanthini on வைகாசி 8, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நான்கு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அடுத்தது யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் தமிழக அரசியல் களம் பெரும் குழப்பத்திலும், பரபரப்பிலும் ஆழ்ந்துள்ளது. கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின்படி, எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் கிடைக்காத நிலையில், ஆளுநரின் ‘மேஜிக் நம்பர்’ கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் தமிழக வெற்றிக் கழகம் திணறி வருகிறது. 107 இடங்களை வைத்துள்ள தவெக, காங்கிரஸின் 5 உறுப்பினர்களுடன் சேர்த்து 112 என்ற பலத்துடன் உரிமை கோரியபோதும், சபாநாயகர் பதவியைக் கழித்தால் 111 உறுப்பினர்களே மிஞ்சுவர் என்பதால், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் விஜய்யின் கோரிக்கையை இரண்டாவது முறையாக அதிரடியாக நிராகரித்துள்ளார்.

இந்தச் சூழலில், தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, பரம எதிரிகளாகக் கருதப்படும் திமுகவும் அதிமுகவும் கரம் கோர்க்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. தவெக ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க, திமுக வெளியிலிருந்து அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகவும், விசிக தலைவர் திருமாவளவனுக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் பலமாகப் பேசப்படுகிறது. சித்தாந்த ரீதியாக முரண்பட்டாலும், பொது எதிரியான விஜய்யை வீழ்த்த திராவிடக் கட்சிகள் இணையும் இந்த வியூகம் தமிழக மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

   

இருப்பினும், இந்த ‘திமுக – அதிமுக’ கூட்டணியிலும் எண்ணிக்கை விளையாட்டு பெரும் சவாலாகவே உள்ளது. 59 இடங்களை வைத்துள்ள திமுகவின் ஆதரவுடன் அதிமுக (47), விசிக (2), கம்யூனிஸ்ட் கட்சிகள் (4), ஐயுஎம்எல் (2) மற்றும் தேமுதிக (1) என அனைத்தும் இணைந்தாலும் மொத்த பலம் 115 மட்டுமே வருகிறது. பெரும்பான்மைக்கு இன்னும் 3 இடங்கள் தேவைப்படும் நிலையில், 10 இடங்களை வைத்துள்ள பாமக-வை உள்ளே இழுக்க முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது. ஆனால் பாமக உள்ளே வந்தால் விசிக வெளியேறும் என்ற சூழல் நிலவுவதால், விசிக – பாமக இடையே ஒரு தற்காலிக சமாதானத்தை ஏற்படுத்த திராவிடக் கட்சிகள் திரைமறைவில் காய் நகர்த்தி வருகின்றன.

   

எந்த அணியும் பெரும்பான்மையை உறுதி செய்ய முடியாத இழுபறி நிலையால், ஆளுநர் யாரையும் ஆட்சியமைக்க அழைக்காமல் மௌனம் காத்து வருகிறார். இது தவெக தொண்டர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, “மக்களின் தீர்ப்பை மதிக்காமல் அரசியல் சூழ்ச்சிகள் நடப்பதாக” அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு நிலையான கூட்டணி ஆட்சி அமையுமா அல்லது அரசியல் முட்டுக்கட்டையினால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்பது அடுத்த 48 மணி நேரத்தில் தெரியவரும். அதுவரை தமிழக அரசியலில் நிலவும் இந்த விறுவிறுப்பான ‘சதுரங்க வேட்டை’ ஓயப்போவதில்லை.