இரண்டு நாட்களில் கூட்டணி முடிவை அறிவிக்க வேண்டும் என்று பிரேமலதாவிற்கு ஈபிஎஸ் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிலையில் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பங்கேற்க வேண்டும், அதற்காக கூட்டணி பேச்சுகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று இபிஎஸ்ஸுக்கு பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல்வேறு கட்சி தலைவர்களுடன் அதிமுக குழு ரகசியமாக கூட்டணி பேச்சில் ஈடுபட்டுள்ளது. தேமுதிகவை கூட்டணியில் இணைப்பதற்கு ஏற்கனவே பல முயற்சிகள் நடந்துள்ளது. அதிமுக தரப்பில் எட்டு சட்டசபை தொகுதிகள் வரை கொடுக்க ஏற்கனவே உறுதி வழங்கப்பட்டும் தேமுதிக தரப்பில் 21 சட்டசபை தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா எம்பி பதவி கேட்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் திமுகவிற்கு இணையாக தேர்தல் செலவு செய்ய உதவ வேண்டுமென்று கேட்கப்பட்டுள்ளது.
ஆனால் ராஜ்ய சபா சீட்டை தற்போது தர முடியாது 10 சட்டசபை தொகுதிகள் வரை வழங்குவதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் அதிமுகவிடம் வைத்த கோரிக்கையை பிரேமலதா திமுகவிடம் வலியுறுத்தியுள்ளார். கூட்டணி கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டி இருப்பதால் ஏழு தொகுதிகள் மட்டும் தருவதாக திமுக உறுதி அளித்துள்ளது. அதிமுகவிடம் பேசிக்கொண்டே திமுகவிடம் பேசுவது பழனிச்சாமிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் கூட்டணி முடிவை தெரிவிக்க வேண்டும் என்று பிரேமலதாவிற்கு ஈபிஎஸ் கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
