சொத்து வாங்குவோருக்கு தமிழக அரசின் பம்பர் ஆஃபர்….. ஒரே நாளில் மாறப்போகும் லக்…. ஆடிப்பெருக்கு நன்னாளில் காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்….!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடிப்பெருக்கு நன்னாளில் புதிய முயற்சிகளைத் தொடங்கினால் அது பன்மடங்கு பெருகி வளம் தரும் என்பது மக்களின் ஆழமான நம்பிக்கையாகும். இதனால் நிலம் மற்றும் புதிய வீடுகளைச் சொந்தமாக்க விரும்புபவர்கள், தங்களின் வாழ்நாள் கனவான பத்திரப்பதிவை இந்த சுபதினத்தில் செய்யவே அதிகம் விரும்புகின்றனர். பொதுவாக சுபமுகூர்த்த நாட்களில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்பதால், பலரால் அன்றைய தினம் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் போகிறது. இதனால் ஆடிப்பெருக்கு போன்ற சிறப்பு நாட்களில் கூடுதலாக டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

பொதுமக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பத்திரப்பதிவுத் துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால், பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி பத்திரப்பதிவு செய்ய ஏதுவாக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ஏற்பாடு மூலம் சுபதினத்தில் பத்திரப்பதிவு செய்யத் திட்டமிட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது.

   

பதிவுத்துறை வெளியிட்டுள்ள விவரங்களின்படி, வரும் 03.08.2026 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் வழங்கப்படும். மேலும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 முக்கிய அலுவலகங்களில் வழக்கமான 100 வில்லைகளுடன் கூடுதலாக 50 சாதாரண வில்லைகளும், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் வில்லைகளோடு கூடுதலாக 4 தட்கல் வில்லைகளும் சேர்த்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.