ஒரு ஆலமரத்தின் கீழ் சிறிய ஸ்வீட் கடையாக ஆரம்பித்த நிறுவனம் இன்று பல கிளைகளாகப் பரந்து விரிந்து இன்று உலகெங்கிலும் தனது தொழில் சாம்ராஜ்யத்தை திறம்பட நடத்தி வருகிறது அடையார் ஆனந்த பவன் நிறுவனம்.
இராஜபாளையம் பழைய பாளையத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் சிங்கராஜா மற்றும் லட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு நான்காவது மகனாய் பிறந்தவர்தான் திருப்பதிராஜா. வீட்டுச் சூழ்நிலை காரணமாக ஆரம்பக்கல்வியான ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.
சிறிது காலத்திற்குப் பின் 1965-ம் ஆண்டு இராஜபாளையம் அம்பலப்புளி பஜாரில் “ஸ்ரீ.குரு ஸ்வீட் ஸ்டால்” என்ற கடையை ஆரம்பித்தார். தனது நளபாகத்தாலும், அயராத உழைப்பாலும், வாடிக்கையாளர்களைக் கவர்ந்தார். இவரது ஸ்பெஷல் தயாரிப்பான தென் மாநிலத்து மலாய் பால் பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து இனிப்புச் சேவு, ஜாங்கிரி, மிக்ஸ்சர், கோதுமை அல்வா போன்றவற்றிலிருந்து வித்தியாசமான சுவையும், தரமும் வாடிக்கையாளர்களைப் பெரிதும் ஈர்த்தன. சரக்கு போடுவதற்கும், கடை நடத்துவதற்கும், தனக்கு உதவியாக வேலையாட்களை நியமித்துக் கொண்டார். வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்ததும், சமாளிப்பதற்கு மேற்கொண்டு ஆட்கள் தேவைப்பட்டதால் கிருஷ்ணன் ராஜாவின் இரு தம்பிகளையும் வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.
பல வருடங்கள் தொடர்ந்து இந்தக்கடையை நடத்திக்கொண்டு வந்தார் ராஜா.. இந்த வியாபாரத்தில் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லையே? என்ற வருத்தம் ராஜாவை வெகுவாய் வாட்டியது.
அப்போதுதான் சென்னையின் பழைய வண்ணாரப்பேட்டையில் “ஸ்ரீ ஆனந்தபவன் ஸ்வீட்ஸ்” என்ற பெயரில் கடை ஆரம்பித்தது, ராஜா முன்பை விட உத்வேகமாய் உழைக்க ஆரம்பித்தார். மூத்த மகன் வெங்கடேச ராஜாவும், இளைய மகன் ஸ்ரீனிவாச ராஜாவும், தங்களது உழைப்பைக் கொட்டி தந்தையின் வெற்றி இலக்கை அடைய பாடுபட்டனர். நெய் கொண்டு இனிப்புகளை தயாரித்து புதுமைகளைப் புகுத்தி இனிப்பிற்கோர் புதிய இலக்கணம் படைத்தனர். சென்னை மக்களுக்கு புதியதோர் இனிப்பின் அனுபவத்தை வழங்கினர். வாடிக்கையாளர்கள் இவர்களின் சுவை, தரம், சுகாதாரம் ஆகிவற்றைக் கண்டு கடையில் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். வெற்றி இவர்கள் வசப்பட்டது.
ஆட்டுக் கிடாவால் சூப்பர் ஹிட் ஆன படம்.. வெற்றி விழாவில் ஆட்டுக்கு மாலைபோட்டு கௌரவித்த சின்னப்ப தேவர்
அதனைத் தொடர்ந்து அவர்கள் கண்ட வளர்ச்சியின் வெளிப்பாடாக அடையாறு எல்.பி.ரோடு பத்மநாம நகரில், ராஜா ஒரு புதிய கிளையை தொடங்கினார். இதற்கு “அடையார் ஆனந்த பவன்” என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. 1988-ம் ஆண்டு கடை இனிதே திறந்து வைக்கப்பட்டது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட கல்கத்தா சாட் வகைகள் வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து சென்னை முழுவதும் கிளைகள் பரப்பத் தொடங்கின. மேலும் உணவு வகைகளை பரிமாறும் “A2B Restaurant” என்ற உணவகமும் இனிப்பகத்தோடு சேர்ந்து அமைக்கப்பட்டது.
இதுவே பக்கத்து ஊர்களிலும், பக்கத்து மாநிலங்கள் என்ற இலக்கை அடைந்து இன்று வெளிநாடுகளில் கிளையை அமைத்து வேரூன்றி இன்று ஆலமரமாக காட்சியளிக்கிறது. இன்று இந்த குழுமத்தின் சார்பாக ஐஸ்கிரீம், பேக்கரி, சாக்லேட் போன்ற பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிப்பிலும் நுழைந்து சில்லறை விற்பனையிலும் காலூன்றி வெற்றி கண்டுள்ளனர்.வெறும்4 பேரைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகம் இன்று நேரடியாக 15,000க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்டு விளங்கி வருகிறது. ஒரு இனிப்பின் வெற்றி இமாலய வெற்றியாக விஸ்வரூபம் எடுத்த வரலாறு இது.