நடிகை வாசுகி காமெடி ஜாம்பவான்களான கவுண்டமணி செந்தில் உள்ளிட்டோருக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால் வாசுகி அதிமுகவில் இணைந்தார். நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த வாசுகி ஜெயலலிதா இருந்தவரை நன்றாக இருந்தார்.
சமீபத்தில் வாசுகி அளித்த பேட்டியில் கூறியதாவது, ஜெயலலிதா புகைப்படம் பதித்த பெரிய டாலர் செயின், வைர மூக்குத்தி, காலில் அரை கிலோவுக்கு கொலுசு எல்லாம் போட்டு இருந்தேன். ஜெயலலிதா இறந்த பிறகு பணக்கஷ்டம் வந்தது. எல்லாவற்றையும் விற்று விட்டேன். கர்ப்பப்பையில் மூன்று கட்டி இருந்தது. அதையும் எடுத்து விட்டார்கள். எனக்கு தெலுங்கு நடிகர் சங்கம் தான் உதவி செய்தது.
மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு அங்குள்ள நடிகர் சங்கத்தில் பணம் கட்டி என்னை உறுப்பினர் ஆக்கினார். நாகேந்திர பாபு சிரஞ்சீவி ஆகியோர் பணம் தந்ததால் கண் ஆபரேஷன் செய்து கொண்டேன். ரேஷன் கடையில் தரும் அரிசியை வைத்து தான் சாப்பிட்டு வருகிறேன். தங்குவதற்கு இடமும் வேலையும் கொடுத்தால் நான் பிழைத்துக் கொள்வேன்.
தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தான் உதவி செய்கிறார்கள். இங்குள்ள நடிகர் சங்கத்தினர் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ரோடு ரோடு ஆக அலைகிறேன். டாய்லெட் கழுவும் வேலைக்கு கூட கூப்பிட மாட்டேங்குறாங்க. நாசர், கார்த்தி, விஷால் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுகிறேன். தயவு செஞ்சு எனக்கு உதவி பண்ணுங்க என கண்ணீருடன் கூறியுள்ளார்.