பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானவர் தாமரைச்செல்வி. சின்னத்திரை சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் இவர், தற்போது பெண் தொழில்முனைவோருடன் இணைந்து திருமண மண்டபங்களில் எக்ஸ்போ (Expo) நடத்தும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், திருச்செங்கோட்டில் எக்ஸ்போ நடத்துவதற்குத் திட்டமிட்டிருந்த அவருக்குப் பெரிய கடைக்காரர்கள் மற்றும் உள்ளூர் அமைப்புகளால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றும் கூட நிகழ்வை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறி, அவர் வெளியிட்டுள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நீதிமன்ற அனுமதி இருந்தும் தனக்கு நேர்ந்த இந்த நெருக்கடி குறித்து அமைச்சர் அருண்ராஜிடம் முறையிட தாமரைச்செல்வி தீவிர முயற்சி செய்துள்ளார். கடந்த 10 நாட்களாக அமைச்சரின் பகுதிக்குச் சென்று, அவரது உதவியாளர்கள் மற்றும் நெருங்கிய நபர்களிடம் பேசியும் அமைச்சரை நேரில் சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது இதே அருண்ராஜுக்காக இரவு பகல் பாராமல், தூங்கிக் கொண்டிருந்த வாக்காளர்களைக் கூட எழுப்பி வாக்குச் சேகரித்த தன்னை, இப்போது சந்திக்கக் கூட மறுப்பது மிகுந்த வேதனையளிப்பதாக அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் என்று சுட்டிக்காட்டியுள்ள தாமரைச்செல்வி, உள்ளூர் பெரிய வியாபாரிகளுக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தனக்குத் தவெக தலைவர் விஜய்யைப் பிடிக்கும் என்பதால் தான், அவர் சார்ந்த கூட்டணிக் வேட்பாளரான அருண்ராஜுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கச் சென்றதாகவும், ஆனால் இப்போது ஒரு பிரச்சனை என்று வரும்போது தங்களைக் கைவிட்டுவிட்டதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த ஏமாற்றத்திற்கு அமைச்சர் பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று உரக்கக் குரல் கொடுத்துள்ளார்.
இந்த எக்ஸ்போ நிகழ்ச்சி தன் சுயநலத்திற்காக மட்டும் நடத்தப்படவில்லை என்றும், அதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாக அரங்குகள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் தாமரைச்செல்வி விளக்கியுள்ளார். எனவே, இந்த நிகழ்வைத் தடுத்ததன் மூலம் தங்களை மட்டுமல்லாமல், இதையே வாழ்வாதாரமாக நம்பியிருந்த பல எளிய பெண்களின் நம்பிக்கையையும் அமைச்சர் சீர்குலைத்துவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ, தற்போது அரசியல் மற்றும் பொதுமக்களிடையே காரசாரமான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
