டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்தவர். அவரது அடுக்குமொழி வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. சிறந்த பேச்சுத்திறமை கொண்ட டி.ராஜேந்தர் மனதில் பட்டதை பொதுவெளியாக இருந்தாலும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். ஆதலால் சில நேரங்களில் அவர் பேசியது சர்ச்சையை உண்டு செய்துவிடும்.
ஒரு தலை ராகம் என்ற படம் மூலமாக அறிமுகம் ஆன டி ராஜேந்தர் அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.தொடக்கத்தில் திரைப்படங்களை இயக்கி, பாடல்கள் எழுதி, இசையமைத்து, ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கத்தை மேற்கொண்ட அவர் உயிருள்ளவரை உஷா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து தன் படங்களில் தானே கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்.
ரஜினி, கமல் போன்றோருக்கான மாஸ் ஆடியன்ஸ்கள் இருப்பது போலவே டி ஆருக்கும் தனியான ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. குறிப்பாக அவருக்கு மிக அதிக எண்ணிக்கையில் பெண் ரசிகைகள் இருந்தார்கள். அவரின் அந்த காலத்து கதைகள் பல இப்போது சீரியல்களாக எடுக்கப்பட்டு ஹிட்டடித்து வருகின்றன.
டி ராஜேந்தர் சினிமாவில் பிஸியாக இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் தனக்கென்று ஒரு ஸ்டைலை வைத்திருந்தார். அவர் இயக்கும் படங்களில் அவரே இசையமைத்து பாடல்கள் எழுதுவார். அதே போல ஒரு குறிப்பிட்ட நடிகர்கள் மட்டுமே அவர் படத்தில் நடிப்பார்கள். பெரும்பாலும் கதாநாயகிகள் புதுமுகங்களாக இருப்பார்கள். அதே போல டி ராஜேந்தர் கதாநாயகிகளை தொட்டுக் கூட நடிக்க மாட்டார்கள். காதல் காட்சிகளாக இருந்தாலும் கூட.
அவரின் இந்த கொள்கைப் பற்றி நடிகை நளினி ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “டி ஆர் சார் கூட நடிக்கும் போது என் மூச்சுக் காத்து அவர் மேல பட்டாக் கூட, அம்மா மூச்சுக்காத்த அடக்கி வச்சிக்கோ, என் கைல படுது பாருனு சொல்வார். சினிமாவில பாலியல் தொல்லை இருப்பதாக சொல்வாங்க. ஆனால் டி ஆர் சாரோட மூச்சுக்காத்து கூட கதாநாயகிகள் மேல படாது” என பாராட்டுப் பத்திரம் கொடுத்துள்ளார்.