தமிழ் சினிமாவின் இரண்டு தலைமுறை சூப்பர் ஸ்டார்களுக்கும், அதாவது எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீ பிரியாவைப் பற்றி தெரியாத 70,80 சினிமா ரசிகர்கள் யாருமே கிடையாது. தனது துறுதுறு நடிப்பில் உடன் நடிக்கும் ஹீரோக்களையே மிஞ்சிவிடுவார்.
நடிகை ஸ்ரீபிரியா வருடத்திற்கு 18 படங்களை வரை செம பிஸியாக நடித்தார் என்றால் நம்ப முடிகிறதா? அந்த அளவிற்கு இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. 1970-80 களில் அப்போதிருந்த முன்னணி ஹீரோயின்களை ஓரங்கட்டி நடிகைகளில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தார். ‘முருகன் காட்டிய வழி’ என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான ஸ்ரீபிரியா பாலச்சந்திரின் கேமரா கண்களில் பட்டபிறகு இவர் புகழின் உச்சிக்கே சென்றார்.

#image_title
கே. பாலச்சந்தர் இயக்கிய ‘அவள் ஒரு தொடர்கதை’ என்னும் படத்தில் இளம் விதவையாகவும், கமலை ஒருதலையாகக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து நவரத்தினம் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜோடி, திரிசூலம் படத்தில் சிவாஜிக்கு ஜோடி சேர முன்னணி கதாநாயகர்களின் ஆஸ்தான நடிகையாக வலம் வந்தார்.
இவரது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகத் திகழ்வது அவள் அப்படித்தான் என்னும் திரைப்படம். இதில் தாம் சந்தித்த தொடர் தோல்விகளின் காரணமாக, சமூகத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை அற்றுப்போன பெண்ணின் கதாபாத்திரத்தினை மிக இயல்பாகவும், அற்புதமாகவும் சித்தரித்திருந்தார். வணிக அடிப்படையில் வெற்றி பெறாவிடினும், இப்படம் இன்றளவும் தமிழின் தலை சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

#image_title
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன் முதலில் கதாநாயகனாக நடித்த பைரவி படத்தில் ரஜினிக்கு ஜோடியானார். அதன்பின் அவருடன் அவள் அப்படித்தான், ஆடுபுலி ஆட்டம், பில்லா, தீ, இளமை ஊஞ்சலாடுகிறது, அலாவுதீனும் அற்புத விளக்கும், பொல்லாதவன், தனிக்காட்டு ராஜா என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இதேபோல் கமலுடனும் அதிக படங்களில் ஜோடியாக நடித்திருப்பார்.
ஸ்ரீபிரியாவுக்கு பெரும்புகழை ஈட்டித் தந்த படம் என்றால் தேவர் பிலிம்ஸ் எடுத்த ஆட்டுக்கார அலமேலு படம் தான். நடிகை ஸ்ரீ பிரியா நீயா, நட்சத்திரம், பாபநாசம் என மூன்று திரைப்படங்களை தயாரித்தும், மேலும் சில படங்களை இயக்கியும் உள்ளார். சன்டிவியில் ஒளிபரப்பான சின்னபாப்பா, பெரியபாப்பா தொடர் மூலம் சின்னத்திரையில் நுழைந்து மீண்டும் ரசிகர்களைக் கவர்ந்தார். தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.