சென்னை மாவட்டத்தில் உள்ள போரூரில் இருந்து நேற்று 88K மாநகர பேருந்து குன்றத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து கெருகம்பாக்கம் அருகே சென்ற போது அதில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படியும், பேருந்து மேற்கூரை மீது ஏறி கூச்சலிட்டபடியும் பயணம் செய்தனர்.

இந்நிலையில் பேருந்தில் பயணம் செய்த பா.ஜ.க பெண் நிர்வாகி தனது செல்போனில் வீடியோ எடுத்தவாறு இருந்தார். பேருந்து நின்றவுடன் அவர் கீழே இறங்கி பேருந்தின் முன் மற்றும் பின் பக்க படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பள்ளி கல்லூரி மாணவர்களை அடித்தும், ஒருமையில் திட்டியும், கையை பிடித்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டார்.

மேலும் அவர் ஓட்டுனர் மற்றும் நடத்துநரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தாக்கிய விவகாரம் தொடர்பாக பா.ஜ.க பிரமுகர் மற்றும் சினிமா துணை நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் மீது போலீசார் நாச்சியார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் ரஞ்சனாவை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு ரஞ்சனாவுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ரஞ்சனா போலீசாரிடம் என்னை கைது செய்ய வாரண்ட் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு போலீசார் FIR போட்டிருக்கிறோம் என கூறினார்கள். உடனே ரஞ்சனா FIR copy-யை காண்பித்தால்தான் வருவேன் என அடம் பிடித்தார். அதன் பிறகு ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க எங்க அம்மா கிட்ட சொல்லிட்டு வரேன் என ரஞ்சனா கூறினார். தொடர்து விடாப்பிடியாக போலீசாரின் வாகனத்தில் ஏற மறுத்து அடம்பிடித்த ரஞ்சனாவை போலீசார் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
