தமிழ் சினிமாவில் கதாநாயக, கதாநாயகிகளுக்கு என்று ஒரு ரசிகப் பெரும்கூட்டம் இருப்பது கவர்ச்சி நடிகைகளுக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வரிசையில் முக்கிய இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. அவர் தான் நடித்த பெரும்பாலான படங்களில் கவர்ச்சி வேடங்களையே தேடி தேடி நடித்தார் என்றாலும், அவரிடம் ஒரு தனித்துவம் இருந்தது. இதனால் தென்னிந்தியா முழுவதும் அவருக்கு படங்களுக்கு வரவேற்பு இருந்தது.
ஆனாலும் அவர் தன்னுடைய 35 ஆவது வயதில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். இன்றுவரையும் அவரின் மரணத்துக்கான காரணம் மிகவும் மர்மமாகவே உள்ளது. அப்படி இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து 27 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு நடிகை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் என்றால் அது நடிகை சில்க் ஸ்மிதா மட்டும்தான். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரின் வாழ்க்கையை தழுவி தி டர்ட்டி பிக்சர் எனும் திரைப்படம் இந்தியில் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது.

#image_title
இயக்குனர் பாலு மகேந்திராவிடம் ஒருமுறை “நீங்கள் இயக்கியதில் உங்களைக் கவர்ந்த கருப்பு நிறம் கொண்ட நடிகை யார்?” என்ற கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு அவர் “நான் சில்க் ஸ்மிதாவைதான் சொல்வேன். நான் அர்ச்சனா, சில்க் ஸ்மிதா மற்றும் மௌனிகா ஆகியோரை இயக்கியுள்ளேன். அதில் சில்க் ஸ்மிதாவைதான் stunningly beautiful என்று சொல்வேன்.
அவரின் கண்களும், மூக்கும், பாம்பு போன்ற உடல்வாகும் மூன்றாம் பிறை படத்தில் கமல்ஹாசனோடு பொன்மேனி உருகுதே பாடலில் அவரின் ஈர்ப்பும் வெள்ளை நிற தோல் கொண்ட அழகிகளால் பண்ண முடியாது. அவர்களால் சில்க்கின் பக்கத்தில் கூட வரமுடியாது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் சில்க் ஸ்மிதாவோடு பல படங்களில் இணைந்து நடித்துள்ள ராதிகா அவரைப் பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “சில்க் ஸ்மிதா நாம் நினைப்பது போல சினிமாவில் காட்டப்பட்டது போலக் கிடையாது. அவர் மிகவும் கண்ணியமானவர். ஷூட்டிங் வந்தால் ஒரு ஓரமாக சென்று கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொள்வார். அவரைப் பார்த்து எல்லாரும் ஜொள்ளு விடுவார்கள். ஆனால் ஒருவர் கூட அவரருகில் நெருங்க முடியாதவர். அந்த அளவுக்கு அவர் தன்னைப் பற்றிய பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தார்” எனக் கூறியுள்ளார்.
