தமிழ் சினிமாவில் ஒரு குறுகிய கால சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக ராமராஜன் கோலோச்சியது நான்கே நான்கு வருடங்கள்தான். ஆனால் இன்றளவும் அவருக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த நான்கு ஆண்டுகளில் அவருக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். எம் ஜி ஆர் போல ஒழுக்கமான இளைஞனாக மக்கள் தோழனாக தன்னைக் காட்டிக்கொண்டார் ராமராஜன்.
1985 ஆம் ஆண்டு வெளியான மண்ணுக்கேத்த பொன்னு என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் மருதாணி, ஹலோ யார் பேசுகிறதே, மறக்க மாட்டேன், சோலை புஷ்பங்கள் ஆகிய திரைப்படங்களை அவர் ஹீரோ ஆவதற்கு முன்பு இயக்கினார். இந்த படங்கள் எல்லாம் கையைக் கடிக்காத அளவுக்கு ஓடி, அவரை ஒரு இயக்குனராக நிலைநிறுத்தின.
அப்போதுதான் அவருக்கு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ படத்தில் கதாநாயகன் ஆகும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அந்த படம் ஹிட்டாக அடுத்தடுத்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்தார். கரகாட்டக்காரன் திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. ராமராஜன் அவர் உதவி இயக்குனராக பணியாற்றிய படங்களில் கதாநாயகியாக நடித்த நளினியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

முதலில் இவர்கள் திருமணத்துக்கு நளினி வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லையாம். அதனால் ஓடிப்போய்தான் அவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் ராமராஜன் மேல் தனக்கு எப்படிக் காதல் பிறந்தது என்பதைக் கூறியுள்ளார்.
அதில் “அவர் என் மேல் ஒருதலைக் காதலில் இருந்தார். அந்த விஷயம் எங்கள் வீட்டில் தெரிந்தபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்ததை தெரிந்துகொண்டு அவரை அழைத்துச்சென்று அடித்து விட்டார்கள். இதைக் கேட்டதும் எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நமக்காக ஒருவர் அடிவாங்கி இருக்கிறாரே. அவர்களை எல்லாம் நாம் பழிவாங்க வேண்டும். இவரைதான் நான் திருமணம் செய்யவேண்டும் என்று வைராக்கியம் எடுத்துக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.
