தென்னிந்திய சினிமாவில் ஜொலித்த நடிகர்கள் பிறகு அரசியலில் நுழைந்து முதல்வராகி இருக்கிறார்கள். அவர்களை தலைவர்களாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். அப்படி நடிகர்களாக இருந்து முதல்வரனவர்களுடன் நடித்த ஒரு பிரபல நடிகை தன்னுடைய கடைசி நாட்களை மோசமாக கழித்துள்ளார். அவர்தான் மறைந்த தென்னிந்திய நடிகை ஜோதிலட்சுமி. தன்னுடைய நடனத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் என்டிஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

70 காலகட்டத்தில் தொடங்கி 2000 ஆம் காலகட்டம் வரை தன்னுடைய நடனத்தால் ஒட்டுமொத்த சினிமாவையும் கட்டி போட்டவர். பெரிய இடத்துப் பெண் என்ற திரைப்படம் மூலமாக சினிமா உலகில் நடிகையாக அறிமுகமான இவர் பிறகு எம்ஜிஆர் உடன் சில படங்களிலும் பாடல்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகை ஜெயமாலினியின் உடன் பிறந்த அக்கா. ஜோதிலட்சுமிக்கு ஜோதி மீனா என்ற ஒரு மகளும் உள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான சேது படத்தில் இடம்பெற்ற கான கருங்குயிலே பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இவரை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது. தன்னுடைய நடனம் மூலமாகவே ரசிகர்கள் மனதில் தனக்கென இடம் பிடித்த ஜோதிலட்சுமியின் இறுதி நாட்கள் புற்றுநோயின் போராட்டத்தில் முடிவடைந்துள்ளது. அதாவது ஜோதிலட்சுமிக்கு ரத்த புற்றுநோய் இருந்த நிலையில் நோய் இருப்பது கண்டறியப்பட்ட 20 நாட்களில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி தன்னுடைய 63 வயதில் ஜோதிலட்சுமி காலமானார்.
