நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள பாச்சல் பஸ் நிலையம் பகுதியில் குணசேகரன் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகின்றார். அவருடைய மனைவி தனலட்சுமி பேக்கரியை கண்காணித்து வந்துள்ளார். அந்த பேக்கரியில் கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் வாடிக்கையாளர் ஒருவர் கெட்டுப்போன கேட்க எதற்காக விற்பனை செய்தீர்கள் என கேட்பதும் அந்த கேக்கை நீங்களே சாப்பிடுங்கள் என்று அந்த பெண் தனலட்சுமிக்கு ஊட்ட முற்படுவதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. தன்னுடைய மகனின் பிறந்த நாளுக்கு அவர் ஆசை ஆசையாக கேக் வாங்கிச் சென்ற நிலையில் அதனை வெட்டி அனைவரும் சாப்பிட ஒரு கட்டத்தில் அது கெட்டுப் போன கேக் என்று தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் கேக்கை அப்படியே பேக்கரிக்கு கொண்டு வந்து என்னுடைய பையனுக்கு இன்னைக்கு பிறந்தநாள், ஆசையாக இந்த கேக்க நான் அவனுக்கு ஊட்டி விட்டேன் இந்தா நீயும் சாப்பிடு என்று உரிமையாளர் வாயில் திணிக்கிறார். எதுக்கு கெட்டுப்போன கேட்க வித்திங்க என்று கேட்டு ஆவேசமாக பேசுகின்றார். இதனைத் தொடர்ந்து பேக்கரியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவு பொருள்களுக்கான தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் பேக்கரிக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
