200 கோடி ரூபாய் பண மோசடி மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்குகளில் டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.30 கோடி மதிப்பிலான சொகுசு ஹெலிகாப்டரை பரிசாக அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஜாக்குலினை “பேபி பொம்மா” என்று குறிப்பிட்டு அவர் எழுதிய கடிதத்தில், இந்தப் பரிசு அவருடைய போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், படப்பிடிப்புகளுக்கு எளிதாகச் செல்லவும் உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த ஹெலிகாப்டரில் ஜாக்குலினின் பெயரைக் குறிக்கும் ‘JF’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து சிறையில் இருந்தபடி பல்வேறு கடிதங்களை எழுதி வரும் சுகேஷ், ஜாக்குலினுடன் தனக்கு நெருக்கமான காதல் உறவு இருந்ததாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இருப்பினும், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் உள்ள ஜாக்குலின் பெர்னாண்டஸ், சுகேஷ் சந்திரசேகர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவரது பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். சுகேஷின் இந்தத் தொடர் அதிரடி அறிவிப்புகள் சட்ட ரீதியாகவும் திரையுலக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
