90 காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் இந்திரஜா. தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ரஜினியின் உழைப்பாளி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். அதனைப் போலவே விஜய் மற்றும் அஜித் இருவரும் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு எங்கள் அண்ணா படத்தில் மட்டும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடித்து இருந்தார். இப்படியான நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர் சமூகத்தில் பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் தன்னுடைய சினிமா பயணம் குறித்த ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்ட போது முழு நேரமாக விஜய் அரசியலுக்கு வந்துள்ளது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். கண்டிப்பாக பெரிய மாற்றத்தை விஜய் சாரிடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நிறைய நம்பிக்கையும் வைத்துள்ளனர். ஒரு சக நடிகையாக இல்லாமல் சாதாரண பிரஜையாக ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன். கூட்டத்தை பார்த்து மட்டும் நம்பிடாதீங்க, அந்த கூட்டத்தை எப்படி ஓட்டாக மாற்ற வேண்டும் என்பதற்கு சரியான வழிநடத்தக் கூடியவர் ஒருவர் விஜய்க்கு தேவை. ஏனென்றால் சேரும் கூட்டம் எல்லாமே வாக்குகளாக மாறும் என்பது நிச்சயம் இல்லை. சிரஞ்சீவி சார், பவன் கல்யாண் சார் இவங்க எல்லாம் கட்சி ஆரம்பிக்கும் போது நான் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். எனவே ரசிகர் கூட்டத்தை வாக்குகளாக மாற்றுவது ஒரு பெரிய விளையாட்டு.

அதற்காக இவர்களை எல்லாம் மக்கள் மதிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. நிறைய மரியாதை, அன்பு, பாசம் மற்றும் அபிமானம் வைத்துள்ளனர். சிரஞ்சீவியை எல்லோரும் அன்னையா என்று தான் கூப்பிடுவார்கள். பவன் கல்யாணை பவர் ஸ்டார் என்று தான் கூப்பிடுவாங்க. தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே இவர்களை பாதிக்கிறார்கள். ஆனால் அரசியல் களம் வேறு மாதிரியானது, அங்க போடும் கணக்குகள் வேறு வகையானது.

சினிமாவில் ஒரு படம் ஓடவில்லை என்றால் அது தோல்வி, அடுத்த படம் ஓடினால் அதை வெற்றி என்பது போல அரசியலை அணுக முடியாது. நீங்க எதிர்பார்க்கிற மாதிரி நடிக்காவிட்டாலும் அது தோல்வி என்று முடிவு செய்யக்கூடியது. அரசியலில் தோற்கும் போது நிறைய லாபம் கிடைக்கும். ஜெயிக்கும் போது நிறைய இழக்க வேண்டி இருக்கும். நீங்கள் தயாராக இருக்க வேண்டும். விஜய் நல்ல மனசுக்காரர், மக்களுக்காக சிந்திக்க கூடிய ஒரு நபர். அதனால் அவரை சரியான முறையில் வழிநடத்தக் கூடியவர்கள் மட்டுமே இப்போதைக்கு தேவை, வேற எதுவுமே அவருக்கே தேவைப்படாது என்று இந்திரஜா அட்வைஸ் வழங்கியுள்ளார்.
