தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இயக்குனராகவும் பிரபலமான நடிகர் தான் காதல் சுகுமார். பரத் நடித்த காதல் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தன்னுடைய பெயரோடு படத்தின் பெயரை சேர்த்துக்கொண்டு காதல் சுகுமார் என்று அழைக்கப்பட்டார். இவர் பார்ப்பதற்கு வடிவேலு போல இருந்ததால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. கமலுடன் இணைந்து விருமாண்டி மற்றும் வசூல்ராஜா போன்ற திரைப்படங்களில் நடித்த இவர் திருட்டு விசில் மற்றும் சும்மாவே ஆடுவோம் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

அந்தப் படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் அண்மையில் கவின் நடித்த ஸ்டார் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெருக்கூத்து கலைகள் மற்றும் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டப்பாங்குத்து திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. தற்போது வெற்றி வேலப்பர் என்ற திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்துவரும் நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படியான நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சில ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு நகை மற்றும் பணத்தை பெற்று மோசடி செய்து விட்டதாக நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சுகுமாரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் சற்று பரபரப்பு கிளப்பியுள்ளது.
