தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை பூமிகா. இவர் 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படம் மூலம் தான் முதல் முறையாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம் மற்றும் சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் ஆகிய இரண்டு திரைப்படங்களும் இவருக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று தந்த படங்களாகும். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 24 வருடங்களாக இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பரத் தாகூர் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பூமிகா, திருமணத்திற்கு பிறகு அதிக அளவில் படங்களில் நடித்து வருகின்றார். இவருக்கு ஒரு அழகிய மகனும் உள்ளார். தற்போது தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணைந்து பிரதர் திரைப்படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் பூமிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், மணிரத்தினம் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நான் தான் நடித்திருக்க வேண்டும்.

மாதவன், சிம்ரன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது நான் தான். ஆனால் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த படத்தில் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது. எது நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ அது தான் நடக்கும். அப்போது அந்த வாய்ப்பை தவறவிட்டாலும் பியூச்சரில் கட்டாயம் அவருடன் ஒரு படம் பண்ண வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்று பூமிகா பேசியுள்ளார்.
