தமிழ் சினிமாவின் மூத்த நடிகை சுமித்ராவின் மூத்த மகளான உமா சங்கரி, இயக்குநர் சீமான் இயக்கிய ‘வீரநடை’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘கடல் பூக்கள்’, ‘தென்றல்’, ‘கோவை பிரதர்ஸ்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குறிப்பாக, கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘சொக்கத் தங்கம்’ திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்தின் தங்கையாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். தமிழ் தவிர மலையாளம், கன்னட மொழித் திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் முத்திரை பதித்த அவர், 2006-ல் துஷ்யந்த் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பிறகு நடிப்பிலிருந்து விலகினார்.
தற்போது நடிகை உமா சங்கரி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொடிய நோயிலிருந்து மீள்வதற்காக, அவர் தற்போது தனது இரண்டாவது கட்ட கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.
தன் உடல்நிலை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள உமா சங்கரி, கடந்த சில நாட்கள் சவாலானதாக இருந்தபோதிலும், இந்தப் போராட்டத்தை முழு நம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விரைவில் முழுமையாக குணமடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவேன் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, தனக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் தனது நன்றியையும் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த நம்பிக்கையூட்டும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
