தமிழ் சினிமாவில் இன்றும் கேப்டன் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்த் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இவரது வாழ்க்கையில் ஒருவரின் நட்பு இன்றியமையாததாக இருந்துள்ளது. அதாவது கேப்டனின் வாழ்க்கை மற்றும் வளர்ச்சியில் இப்ராஹிம் ராவுத்தர் முக்கிய பங்கு வகித்தார். விஜயகாந்துக்கு மெல்ல மெல்ல பட வாய்ப்புகள் கிடைத்து நடிக்க தொடங்கியதும் அவர் நடிக்கும் திரைப்படங்களை முடிவு செய்யும் நபராக ராவுத்தர் மாறினார். அவர் கதையைக் கேட்டு அது விஜயகாந்திற்கு ஏற்ற திரைப்படமா என முடிவு செய்வார். எந்த ஒரு இடத்திலும் விஜயகாந்த் அவரின் பேச்சை தட்டவே மாட்டார்.

அப்படிதான் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை விஜயகாந்த் கொடுத்தார். வில்லனாக நடித்த விஜயகாந்த் ஹீரோவாகவும் அதன் பிறகு ஆக்சன் கதைகளில் நடிக்க வைத்து அவரின் இமேஜை மாற்றியதில் ராவுத்தருக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒரு திரைப்படம் வெற்றி படமாக அமையும் என்பதில் தொடங்கி கால் சூட் கொடுப்பது மற்றும் சம்பளம் பெறுவது என அனைத்து வேலைகளையும் ராவுத்தர் கவனித்து வந்தார். விஜயகாந்தின் சினிமா கேரியரை வடிவமைத்து மொத்தமாக இயக்கியவர் இவர்தான். தன் நண்பனின் பேச்சை தட்ட கூடாத என்பதற்காக விருப்பமே இல்லை என்றாலும் ராவுத்தர் சொன்ன வார்த்தைக்காக விஜயகாந்த் நடித்த திரைப்படங்கள் ஏராளம்.

அதே சமயம் தான் திருமணம் செய்து கொண்டால் எங்கே விஜயகாந்த் மீது கவனம் இல்லாமல் போய்விடுமோ என்பதற்காக வாழ்நாள் முழுவதும் தனது நண்பனுக்காகவே திருமணம் செய்து கொள்ளாமல் ராவுத்தர் வாழ்ந்து வந்தார். அவருடைய வாழ்வில் மொத்த கவனமும் தனது நண்பர் விஜயகாந்த் மீது மட்டுமே இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் விஜயகாந்த் அரசியலில் ஈடுபட அது ராவுத்தருக்கு பிடிக்காமல் போக கொஞ்சம் கொஞ்சமாக இருவருக்குள் பிரிவு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டனர்.
