தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதி, மலையாளத்தில் நடிப்பது குறித்து பேசி இருக்கின்றார்.
தமிழில் மிகப்பெரிய நடிகராக வளர்ந்து நிற்கின்றார் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார்.
வெற்றி மற்றும் தோல்வி என இரண்டும் மாறி மாறி வந்தாலும் தனது திரைப்படத்தால் மக்கள் செல்வன் என்ற பட்டத்தை பிடித்திருக்கின்றார். விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பிறகு நெகடிவ் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ரஜினியுடன் பேட்ட திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
பிறகு விஜய் உடன் மாஸ்டர், கமலஹாசன் உடன் விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி பாலிவுட்டில் ஷாருக்கானுக்கும் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். ஜவான் திரைப்படத்தை தொடர்ந்து இனிமேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி இருக்கும் விஜய் சேதுபதி அதன் பிறகு மகாராஜா என்ற திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்திருக்கின்றார்.
இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் மிக அருமையாக நடித்திருக்கின்றார் விஜய் சேதுபதி. இதைத் தொடர்ந்து ஒரு தனியார் youtube சேனல் பேட்டியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி அதில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருந்தார். மலையாளத் திரைப்படங்களில் உங்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு வந்ததா என்று கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்து இருந்தார் விஜய் சேதுபதி.
மலையாளத்தில் மோகன்லால் உடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது ஆனால் அந்த திரைப்படத்தில் தன்னால் நடிக்க முடியாமல் போனது. பிறகு மம்முட்டியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது. அவரே என்னை அழைத்து பேசினார். அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை உங்கள் வாய்ஸை கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் எனது குழந்தைகளுக்கு அவர் நடித்த மறுமலர்ச்சி திரைப்படத்தை போட்டு காட்டி அவரைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தேன். அந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்தில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். மோகன் லால் மற்றும் மம்முட்டி இருவருடனும் நல்ல கதை அமைந்தால் கட்டாயம் நான் நடிப்பேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்திருக்கின்றார்.