நடிகர் சிங்கம்புலி பல திரைப்படங்களில் உதவி இயக்குனர், கதை ஆசிரியர் மற்றும் இயக்குனராக இருந்தாலும் இதுவரைக்கும் காமெடி நடிகராகவே நடித்து வந்த நிலையில் முதல் முறையாக மகாராஜா திரைப்படம் மூலம் தான் வில்லன் அவதாரம் எடுத்தார். இது ஒரு பக்கம் பாராட்டுக்களையும் மற்றொரு பக்கம் விமர்சனத்திற்கும் உள்ளாகியது. நடிகர் சிங்கம் புலி பிதாமகன் மற்றும் நான் கடவுள் போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ரெட், மாயாவி போன்ற திரைப்படத்தை இயக்கவும் செய்தார். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் மாயாண்டி குடும்பத்தார் படத்திற்கு பிறகு கிடைக்க தொடங்கியது. அந்தத் திரைப்படத்தில் ஒரு குழந்தை போல சாக்லேட் சாப்பிட்டு கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும் சிங்கம் புலி யாராலும் மறந்து இருக்க முடியாது.
அதிலும் தன்னுடைய அப்பாவான ஜி எம் குமாரிடம் அப்பா நீ செத்தா இந்த கட்டில் எனக்கு தானே என்று கேட்பது, பிறகு எல்லோரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போதே நீங்க எல்லாம் மாடு முட்டி தான் சாகப் போறீங்க என்று சாபம் கொடுப்பது போன்று பல இடங்களில் இவருடைய தனித்துவமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. அதன் பிறகு நடித்த படங்களில் எல்லாம் சிங்கம் புலி காமெடி கேரக்டரிலேயே நடித்து வந்திருந்தார். ஆனால் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படத்தில் தான் அவர் பாலியல் வன்புணர்வு செய்பவராக நடித்திருந்தார். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் தான் இருந்தது.
தற்போதும் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சிங்கம் புலி சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமாவுல நிறைய பேர் நல்லவங்க இருக்கிறார்கள். குறிப்பா பிஸ்கின் சார் படத்துல நான் நடிக்கும் போது இதுவரைக்கும் நீங்க வேற மாதிரி பண்ணிட்டீங்க இனிமே நீங்க வித்தியாசமா பண்ணனும் என்று சொன்னாரு. என்ன தனியா கூட்டிட்டு போய் சும்மா ரெண்டு லட்சத்துக்கு மேல செலவு பண்ணி கோட் சூட், வாட்ச் என நிறைய வாங்கி கொடுத்தாரு. சைக்கோ படத்துக்காக தான் அது எல்லாம் செலவு பண்ணாரு.
படம் முடிஞ்சதும் அவ்வளவு விலை உயர்ந்த பொருட்கள் எல்லாத்தையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீங்களே வச்சுக்கோங்க என்று சொன்னாரு. ஆனா அதுல சும்மா ஒன்னு ரெண்டு பொருளை மட்டும் எடுத்துக்கிட்டு ப்ரொடக்ஷன் கம்பெனி வச்சிருக்க அவர்கிட்ட எல்லாத்தையும் கொடுத்துட்டேன். சைக்கோ படம் முடிச்சுட்டு அடுத்ததா ட்ரெயின் திரைப்படம் பண்ணி இருக்கேன். எனக்கு எப்பவாது மனசு ரொம்ப கஷ்டமா இருந்தா அவருக்கு தான் உடனே போன் பண்ணுவேன். என்ன சார் சொல்லுங்க வாங்க பேசிக்கலாம் என்று ஆபீஸ்க்கு கூப்பிட்டு பேசுவாரு. இந்த சினிமாவுல நான் நேசிக்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க என்று சிங்கம் புலி பேசியுள்ளார்.