மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கொம்புசீவி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பொன்ராம் இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், சண்முக பாண்டியன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனக்குப் பிறப்பின்போது வைக்கப்பட்ட பெயர் ‘சண்முக பாண்டியன்’ அல்ல என்றும், முதலில் ஒரு இஸ்லாமியப் பெயரே சூட்டப்பட்டது என்றும் வெளிப்படையாகக் கூறியுள்ளார். தனது தந்தைக்கு இருந்த மதநல்லிணக்க உணர்வால், அவருக்கு நெருக்கமான நண்பர்களின் நினைவாக இந்த முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் உயிர்மூச்சாகத் திகழ்ந்த இப்ராகிம் ராவுத்தர் மீதான அளவற்ற அன்பால், சண்முக பாண்டியனுக்கு ‘ஷௌஹத் அலி’ என்று பெயர் சூட்ட விஜயகாந்த் விரும்பியுள்ளார்.
தனக்குச் சாதி, மத வேறுபாடுகள் கிடையாது என்று அவர் உறுதியாக நின்றாலும், அந்தப் பெயரால் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு மற்றும் ஆவணச் சிக்கல்கள் வரக்கூடும் என்று ராவுத்தர் மாமா எடுத்துக்கூறியுள்ளார். அவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட பின்னரே, சண்முக பாண்டியன் எனப் பெயர் மாற்றப்பட்டதாக அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
