Connect with us

தியேட்டரில் சாபம் விட்ட பெண்… இதனால்தான் நாசர் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டார்… பிரபலம் பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

CINEMA

தியேட்டரில் சாபம் விட்ட பெண்… இதனால்தான் நாசர் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டார்… பிரபலம் பகிர்ந்த ஆச்சர்யத் தகவல்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துக் கலக்கி  வருபவர் நாசர். எந்த ஒரு கேரக்டரைக் கொடுத்தாலும் அதற்கு தனது நடிப்பால் உயிர் கொடுக்கும் வித்தைக்காரர். தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்களைப் போலவே நாசரும் இயக்குநர் கே.பாலச்சந்தரின் கண்டுபிடிப்பு தான். தனது கல்யாண அகதிகள் என்ற படம் மூலமாக நாசரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.

அந்த படத்தில் ஒல்லியான தேகம், ஒடிசலான முகத்துடன் குடிகார கணவனாக நடித்த நாசர் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞராக மாறுவார் என யாரும் அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதன் பின்னர் தனது திரைப்படக் கல்லூரி நண்பரான யூகி சேது இயக்கிய கவிதை பாட நேரமில்லை என்ற திரைப்படம் அவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.

   

அதன்பின்னர் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துக் கவனத்தை ஈர்த்திருப்பார் நாசர். அதனைத் தொடர்ந்து தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவிற்கு தனித்துவமான வில்லன் நடிகரை அடையாளம் காட்டியது.

   

இப்படி வில்லனாக நடித்து சிறப்பாக சென்றுகொண்டிருந்த நாசர், திடீரென கதாநாயகனாக இரண்டு படங்கள் நடித்தார். அவை  முகம் மற்றும் அவதாரம் ஆகிய படங்கள் ஆகும். அந்த இரு படங்களுமே தோல்விப் படங்களாக அமைய, நாசருக்கு ஏன் வேண்டாத வேலை என்று அவரைப் பலரும் விமர்சித்தனர். அதனால் அவரின் சினிமா கேரியரில் ஒரு சிறு தேக்க நிலை ஏற்பட்டது.

 

அதன் பின்னர் அவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இன்றளவும் பிஸியான நடிகராக உள்ளார். இந்நிலையில் நாசருக்கு ஏன் ஹீரோவாக நடிக்கவேண்டும் என்ற ஆசை வந்தது என்பது குறித்து சிவகுமார் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அதில் “நாசர் தான் வில்லனாக நடித்த ஒரு படத்துக்கு அவருடைய அம்மாவை அழைத்துச் சென்றுள்ளார். படம் முடிந்ததும் அவரை சில பெண்கள் சாபம் விட்டுத் திட்டியுள்ளனர். இதைக் கேட்டு நாசரின் அம்மா, அவரைக் கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்துவிட்டாராம். அதனால்தான் தான் ஹீரோவாக நடித்தே ஆகவேண்டுமென்ற உத்வேகம் நாசருக்கு வந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

More in CINEMA

To Top